அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அண்மையில் தமது நண்பனின் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார். மறுநாள் அவரை பார்வையிட்டவேளை மயக்கநிலையில் காணப்பட்டார்.பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறான மரணங்கள் யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக அளவிற்கு அதிகளவில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்தி நோய் நிலைமைக்கு உள்ளாகும் பலர் கடந்த காலங்களில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



