வடக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு உரிய வகையில் அரசாங்கத்தினால் மீள ஒப்படைக்கப்படும்’ என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர கருணாநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் அமைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மற்றுமொரு கட்டடம் திறக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதியில் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரால் நேற்றைய தினம் (23) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, விகாரையொன்று கட்டப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாக குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறித்து தேசிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரனிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த அவர், ‘மக்களின் காணியை மக்களுக்கு பெற்றுதருவதே தங்களது பொறுப்பு’ என்று தெரிவித்தார்.
‘அதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பலப்படுத்தப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிடுகின்ற பின்னணியில் தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த புதிய கட்டடம் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸார் அசமந்தமாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், சட்டவிரோத கட்டடத்தை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபரே திறந்து வைத்துள்தாக மக்கள் சாடுகின்றனர். அத்துடன் விகாரை நிர்வாகத்தின் சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகளுக்கு பொலிஸார் தொடர்ந்தும் துணை போவது குறித்து காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



