2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக நேர்மறை வளர்ச்சியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் இலங்கைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலையில் 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2 கோடியே 74 இலட்சத்து 19 ஆயிரத்து 804 மில்லியன் ரூபாவிலிருந்து இருந்து 2 கோடியே 98 இலட்சத்து 98 ஆயிரத்து 564 மில்லியன் ரூபாவாக அதிகரித்து, 9 சதவீத நேர்மறை மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு விலையில் விவசாயத்துறை 8.3 சதவீதமும், கைத்தொழில்துறை 25.5 சதவீதமும் சேவைத்துறை 57.5 சதவீதமும் பங்களித்துள்ளன. 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வீழ்ச்சியுற்ற மொத்த தேசிய உற்பத்தி, 2024ஆம் ஆண்டில் வளர்ச்சி போக்கை காண்பித்துள்ளது.
இது எதிர்காலம் குறித்த நம்பிக்கையான எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தினது நடவடிக்கையால் உலகளாவிய வர்த்தகப் போர் தொடங்கியுள்ளதுடன் இதனூடாக உலக பொருளாதார வளர்ச்சி வேகம் குறையக்கக்கூடும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 2.9 சதவீதம் என்ற உலக பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 2.3 சதவீதமாக குறைவடையலாமென எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் 2026ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.2 சதவீதமாக வீழ்ச்சியடையக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.’இது வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்’ என்றும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



