வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களும் கட்டுப்பணமும் செலுத்தப்பட்டன

2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17) காலை 8.30க்கு ஆரம்பமானது. அதன்படி, 336 உள்ளுாராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் 25 மாவட்ட செயலகங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இன்றைய தினம் (17) பல கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன.இதன்படி, இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுவை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டுயிடுவதற்கான கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் செலுத்தியுள்ளது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இன்று (17) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராகச் சட்டத்தரணி கௌசல்யாவை நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபை ஆகிய இரண்டு சபைகளுக்காக மட்டுமே இந்த முறை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இதேவேளை, நடைபெறவுள்ள உள்ளுாராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் இன்று (17) மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினார்.

அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் இன்றைய தினம் (17) கட்டுப்பணம் செலுத்தின. இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட தரப்பினர் இன்று (17) கட்டுப்பணம் செலுத்தினர்.
அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் இன்றைய தினம் (17) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.