அதிகார பகிர்வின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் – ஞானமுத்து ஸ்ரீநேசன்

‘சமஸ்டியாட்சி முறைமை ஊடான அதிகார பகிர்வின் ஊடாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கருத்துரைத்த அவர், ‘இனப்பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையின் அதிகாரங்களை வலது கையில் வழங்கி இடது கை ஊடாக பறிக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஒற்றையாட்சி முறைமை இந்த நாட்டில் தோல்வியடைந்துள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார்.
‘மாகாண சபை முறைமை தொடர்பில் விசேடமாக அவதானத்திற்கொள்ள வேண்டும்’.
‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை 37 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது’. ‘இருப்பினும் இந்த மாகாண சபை முறைமையின் தற்போதைய நிலைமையை ஆராய வேண்டும்’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

‘மாகாண சபைக்கு உரித்தாக்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. மொழிவாரியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்க வேண்டும் ஓராண்டின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மக்கள் வாக்கெடுப்பின் ஊடாக இணைப்பு பற்றி சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து அதுவும் நடக்கவில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘திவிநெகும சட்டத்தின் ஊடாக மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் பறித்துள்ளது’.
‘அந்தந்த மாகாணங்களுக்கு அதிகாரங்களை முறையாக பகிர்ந்தளித்திருந்தால் இந்த நாடு இன்று வங்குரோத்து நிலையடைந்திருக்காது’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.