தமிழரசு கட்சியின் கோரிக்கைக்கு இணங்கும் ரெலோ

‘இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்’ என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’ என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.

‘கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாக போட்டியிடுவது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் உடன் கலந்துரையாட தீர்மானித்திருந்ததாக’ அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘எனினும் அந்த முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது இலங்கை தமிழரசு கட்சியைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியை கடந்த 23ஆம் திகதி உருவாக்கியமை ஏமாற்றம் அளிப்பதாகவும் சி.வி.கே.சிவஞானம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்’.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய இந்த நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது’.
‘இந்த முயற்சியை மேலும் தொடர விரும்புவதாகவும் இதற்காக தங்களது இணக்கம் இருக்குமானால் தொடர்ந்து பேச முடியும்’ என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘அதேநேரம்; தனித்து போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு – கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் இணைந்து கைப்பற்றும் நோக்கில் தேர்தலுக்கு முன்னரே கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

‘இதற்கும் உடன்பாடு இருக்குமாயின் தொடர்ந்து பேசமுடியும்’ என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னைய பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ‘ஒற்றுமையை இலக்காக கொண்டு தங்களது தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயாராகவிருப்பதாக’ குறிப்பிட்டார். ‘எனினும் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தங்களது தரப்பு எதிர்ப்பதாகவும்’ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
‘கடந்த பாராளுமன்ற தேர்தல் எமக்கு முக்கிய பாடத்தை கற்பித்துள்ளது’.

‘எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழ் தேசியம் என்ற நிலைப்பாடு வலுவிழக்கும்’
‘எனவே, பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்ட முடியும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.