உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் பிளவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்காதிருப்பதற்கு தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சந்திப்பு நேற்றும் (26) கடந்த 23ஆம் திகதியும் இடம்பெற்றது.
சங்கு சின்னத்தில் 9 தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாக முதலாவது கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 7 கட்சிகளாக குறைந்துள்ளது.

இந்த கூட்டணிக்கு ஆரம்பத்தில் உடன்பட்ட போதும், கட்சிக்கு நிதியுதவி வழங்கும் தரப்பினர் விரும்பாததால் தமிழ் மக்கள் கூட்டணியின் வி.மணிமண்ணன், பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இந்த கூட்டணியில் இணையாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய (26) கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வி.மணிவண்ணன், ‘ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணைவது தொடர்பில் தங்கள் கட்சியின் செயலாளருடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும்’ என்று கூறிவிட்டு சென்றார்.

குறிப்பாக உள்ளூராட்சி தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது குறித்து கடந்த பல மாதங்களாகவே இந்த தரப்புக்களுக்குள் உள்ளக கலந்துரையாடல் நடந்து வந்தது. எனினும் இதில் தாங்களும் இணைய வேண்டும் என்று வி.மணிவண்ணனே தொலைபேசி மூலம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிடம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தமிழ் மக்கள் கூட்டணியை தங்களுடன் இணைத்துக் கொள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள சிலர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பின்னணியில் எதிர்வரும் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் இணையாதிருக்க தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கலந்துரையாடலில் மு.சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் கலந்து கொண்டது.எனினும் நேற்றைய (26) பேச்சுவார்த்தையில் சமத்துவக் கட்சி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் சமத்துவக் கட்சியையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு பயணிக்க ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிலர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.