அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்த மறுத்த சிங்கப்பூர்

02. மத்தியவங்கி பிணைமுறிமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு சிங்கப்பூர் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற மத்தியவங்கி பிணைமுறிமோசடியுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாடுகடத்துவதற்கான வேண்டுகோளை இலங்கை சட்டமாஅதிபர் திணைக்களம் விடுத்திருந்தது.

எனினும் ‘சிங்கப்பூரின் சட்டங்களின் கீழ் இலங்கைக்கு அவரை நாடு கடத்த முடியாது’ என சிங்கப்பூரின் சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘இலஞ்ச ஊழல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கினை தொடர்ந்து 2025 பெப்ரவரி 25ம் திகதி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் நீதிமன்றில் ஆஜராகவேண்டும்’ என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்யுமாறு, கொழும்பு நிரந்தர நீதாய நீதிமன்றம் ஏற்கனவே, இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த பின்னணியிலேயே சிங்கப்பூர் சட்ட அதிகாரிகள் அவரை நாடு கடத்த முடியாதென அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.