இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது.
இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், திங்கட்கிழமை (24) தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இலங்கை தொடர்பில் எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.
இந்நிலையில் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



