இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கின் அழைப்பின் பேரில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின் போது நாட்டின் சமகால அரசியல் நிலவரம், அரசாங்கத்தின் நடவடிக்கைகள், தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒருவருட காலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில் அந்த தீர்மானத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் தற்போதைய நிலவரம் மற்றும் அதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவுசெய்வதற்கான சாத்தியப்பாடு என்பன பற்றி உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் கேட்டறியவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்படும்’ என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



