சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் முடிவு: அமெரிக்காவுக்கு இந்தியா ஆதரவு

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையில் உடன்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற எஸ்.ஜெய்சங்கர் வாஷிங்டனில் உள்ளார்.

புதிய ட்ரம்ப் நிர்வாகம் பதியேற்றவுடன் அமெரிக்கா, இந்தியாவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் நடத்தினர்.

இந்த சந்திப்பை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையில் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருக்கும் மக்களில், இந்தியர்கள் இருந்தால், அவர்கள் இந்தியர்கள்தான் என்பது உறுதியானால் அவர்களுக்காக இந்தியாவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கிறது. இந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியாவின் இந்த நிலைப்பாடு அமெரிக்காவுக்கு மட்டுமே பிரத்யேகமானது அல்ல. உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியர்கள் இருக்கிறார்கள். எந்த நாடாக இருந்தாலும் அங்கே சட்டவிரோத குடியேற்றம் என்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கூடியது. பல சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கக் கூடியது. எனவே, ஓர் அரசாக நாங்கள் அமெரிக்காவின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம். அதேவேளையில், இந்தியத் திறமைகள் உலக அளவில் அதிகபட்ச வாய்ப்பைப் பெற வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.