இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு புதிய அணுகுமுறையுடன் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர்

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக மீண்டும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன் பிடித்தலை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அதிகாரிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுமாறு பல  மீன்பிடி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பிரதி அமைச்சர் ரத்ன கமகே இவ்வாறு தெரிவித்தார்.

“தென்னிந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதோடு சட்டவிரோத உபகரணங்களையும் பயன்படுத்துகின்றார்கள். இதனை இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றார்கள்” என்று குறிப்பிட்ட பிரதி அமைச்சர் ரத்ன கமகே, “அத்துடன் இந்த நடைமுறைகள் இந்தியப் பெருங்கடலின் கடல் வளங்களுக்கும் தீங்கு விளைவிப்பதால் இரு தரப்பினருக்குமே பாதிப்புக்கள் ஏற்படுகிறன” என்றும் குறிப்பிட்டாா்.

“இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது” என்று தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, “தொடர்ச்சியான பேச்சுக்களின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம்” என்றும், “ஆனால்அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது” என்றும் அவா் தெரிவித்தாா்.

“ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது மட்டும் போதாது” என்று சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, எனவே, இந்திய அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவா் மேலும் தெரிவித்தாாா்.