கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலினுடன் (M K Stalin) சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை தொடர்பில் யாழ் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் நேற்றையதினம் (13.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா (India) – சென்னையில் நடைபெற்ற அயகத் தமிழர் மாநாட்டின் நிகழ்வுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan ), இ.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் “இலங்கை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்ந்தும் தொடர்கதையாகவே உள்ளது.
இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகள் மற்றும் தொழில் முதல்கள் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்தப்படுகின்றன. இது இவ்வாறு இருக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கருத்து பிழையானது என்றுகூட அவர்கள் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டவில்லை” என்றார்.



