பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்க வலியுறுத்தி ஜனாதிபதியிடம் கையளிக்கும் நோக்கில் மனுவில் கையெழுத்து பிரச்சாரம் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைமையில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்பு பிரசாரம், டிசம்பர் 30ஆம் திகதி மன்னாரிலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி முல்லைத்தீவிலும், 2025 ஜனவரி 3 ஆம் திகதி கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுபான்மையினருக்கு எதிரானது என உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாதொழிக்க வேண்டுமென விடுத்துள்ளது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் நட்புறவுடன் பயணிப்போம் எனக் குறிப்பிட்டாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை மறந்துவிடுவதாக, ஜனவரி 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து பிரச்சாரத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் குற்றம் சுமத்தினார்.
“போர் முடிந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் ஒவ்வொரு அரசும் தன்னுடைய அரசாங்கத்தை அமைக்கின்றபோது, நல்லிணக்கம் என்கிறார்கள், மாற்றம் என்கிறார்கள் புதியச சிந்தனைகளோடு பயணிப்போம் என்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின்போது ஒவ்வொருவரும் நல்லிணக்கத்துடன் பயணிப்போம் என சினேகபுபூர்வ அழைப்புக்களை விடுக்கின்றார்கள். ஆனால் 20, 25 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக இருக்கின்ற அந்த அரசியல் கைதிகளின் விடுதலையை ஆட்சிக்கு வந்தவுடன் மறந்துவிடுகின்றார்கள்.”
குறைந்த பட்சம் தற்போதைய அரசாங்கமாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை நடைமுறை சாத்தியப்பத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இப்பொழுது வந்துள்ள மாற்றம் மாற்றம் என பேசிக்கொண்டு செயற்படும் அரசு, இவர்கள் தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும். எத்தனையோ குழந்தைகள் தமது தாய், தந்தையரை பார்க்க முடியாமல் இருக்கின்றார்கள். நீண்டகாலமாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்தவன் ஊடாக உங்கள் நல்லிணக்கத்தையும் மாற்றத்தையும் வெளிப்படுத்தி எதிர்காலத்தில் இந்த தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு வழி சமைக்க வேண்டும்.” என்றார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.