பாகிஸ்தான், தலிபான் இடையே கடும் மோதல்!

எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர். தலிபான் வீரர்களின் தாக்குதலில் 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் மூத்த தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய பிரதமராக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பதவியேற்றதும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல் நபராக வாழ்த்து தெரிவித்தார். “அடிமைத்தனத்தின் சங்கிலியை தலிபான்கள் உடைத்தெறிந்துவிட்டனர்” என்று அவர் புகழாரம் சூட்டினார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே எல்லை பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கிறது. இதன்காரணமாக எல்லை பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.