பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் சேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து நாடுகடத்து மாறு இந்திய அரசிடம் பங்களா தேசத்தின் இடைக்கால அரசு உத்தி யோகபூர்வ கோரிக்கையை இந்த வாரம் அனுப்பியுள்ளது.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்த ஹசீனா அரசு எதிர்க்கட்சிகளை சிறையில் அடைத்து சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வந்ததாகவும், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அதிக இட ஒதுக்கீடுகளை வழங்கி ஏனைய மக்களை புறக் கணித்ததாகவும் தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மாணவர் புரட்சியை தொடர்ந்து ஹசீனா இந்தியாவுக்கு தப்பியோடி யிருந்தார்.
எனினும் இந்தியா ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கும் என பங்களாதேசம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் ஹசீனாவை நாடுகடத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச் சகத்திற்கு தமது வெளிவிவகார அமைச்சகம் கடிதம் ஒன்றை கடந்த திங்கட்கிழமை(23) அனுப்பியுள்ளதாக உள்த்துறை அமைச்சக ஆலோசகர் ஜகன்கீர் அலம் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையில் உள்ள ஆட்களை நாடுகடத்தும் உடன்பாட்டின் அடிப் படையில் அதனை இந்தியா செய்யவேண்டும் என அலம் தெரிவித்துள்ளார். டாக்காவைத் தளமாகக் கொண்ட அனைத்துல குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனா மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் மீது பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளது. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை மேற்கொண்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சிறுபான்மை இந்துக்கள் மீது பங்களாதேச புதிய அரசு இனஅழிப்பை மேற்கொள்வதாக ஹசீனா இந்தியாவில் பல தடவைகள் குற்றம் சுமத்திவருவது பங்களாதேச அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.