முதலில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் கால வாழ்த்து. மேலும் கழிந்து கொண்டிருக்கும் 2024ம் ஆண்டில் ஈழத்தமிழர்களின் தாயகத்தில் “தப்பிப்பிழைக்கும்” வாழ்வியல் முறைமைக்குள் ஆக்கிரமிப்பு அரசான சிறிலங்கா அரசாங்கத்தின் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டனர். 2025ம் ஆண்டுத் தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியும் உள்ளனர். நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களிலும் ஈழத்தமிழர் தேசிய நீக்கத்துக்கும் இறைமை நீக்கத்துக்கும் தன்னால் இயன்றதை எல்லாம் என்றும் செய்யும் சிங்களக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினர் தாம் ஆட்சி அமைப்பதற்கான கூட்டணியாக மற்றைய சிங்களக் கட்சிகளுடன் உருவாக்கிய தேசிய மக்கள் சக்திக்கு ஈழத்தமிழின அழிப்பால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் ஈழத்தமிழர்கள் வாக்குகளால் அரசியல் பணிவை வெளிப்படுத்தியமை வேதனையான வரலாற்றுப்பதிவாக உள்ளது.
இதற்கு ஈழத்தமிழர் தாயகப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் சிங்கள இறைமைகளின் சமத்துவம் குறித்து அரசியல் மட்டத்தில் பேசாமல் விட்டதனால் ஈழத்தமிழரின் இளம் சமுதாயத்தினர் அரசியல் அறியாமைக்குட்பட்டு ஈழத்தமிழ்த் தேசியத்தில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொண்டமை முதல் காரணம். அவ்வாறே ஈழத்தமிழ்ப் பெண்களின் சனநாயகப் பங்களிப்பு மறுக்கப்பட்டு வருவது அடுத்த காரணம். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் எண்ணிக்கை 13 இலிருந்து 22 ஆக அதிகரித்துள்ள இன்றைய நிலையில் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சந்தித்த தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து ஒரு பெண் கூட தெரிவாகாததும் தேசியப் பட்டியலில் கூட இடம்பெறாததும் ஈழத்தமிழரின் பெண்ணடிமைத்துவ வெளிப்பாடே. அவ்வாறே பல இளையவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்தலில் குழுக்களாகப் போட்டியிட்ட போதும் எவருமே உறுப்பினராகாது, கட்சிகளும் கட்சி மனோநிலையில் மக்களை அணுகிய மருத்துவர் அர்ச்சுனா இராமனாதனும்தான் உறுப்பினரானமை ஈழத்தமிழரிடை இளையவர்களின் சனநாயகப் பங்களிப்பு மறுக்கப்படுவதைத் தெளிவாக்கியுள்ளது. இந்த இளையோர் பங்களிப்பு மறுப்பும் பெண்கள் பங்களிப்பு மறுப்புமே ஈழத்தமிழர் தங்கள் இறைமையை மீளுறுதி செய்ய இயலாமைக்கு முக்கிய காரணங்கள் என்பதுடன் ஈழத்தமிழரின் இறைமையை மீளுறுதி செய்வதற்கான தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆட்பலமின்மைக்கும் காரணமாகிறதென்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
மேலும் தேசிய மக்கள் சக்தியினர் சிங்கள பௌத்த பேரினவாதக் கோட்பாட்டில் கொண்டுள்ள மிக்க உறுதி காரணமாக பாரத் இந்திய கூட்டாண்மை இலங்கைத் தீவில் இந்தியாவுக்குப் பயனளிக்கக் கூடிய முறையில் தொடர்வதையே மாற்றியமைக்க முயன்று வருகின்றனர். சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமரதிசநாயக்காவின் இந்தியாவுக்கான அணுகுமுறைப்பயணம் இதனை மீளுறுதி செய்துள்ளது. 1987ம் ஆண்டின் இந்திய சிறிலங்கா உடன்படிக்கை உயிரோடிருப்பதை உறுதிப்படுத்தும் மாகாணசபை முறைமையையும் அதன் தொடர்ச்சியாக இந்தியா முன்மொழியும் தமிழர்களின் கண்ணிய வாழ்வுக்கான அடித்தளமான 13 வது திருத்தத்தையும் வலியுறுத்தி இந்திய சிறிலங்கா கூட்டு அறிக்கையில் ஒரு சொல் கூட இந்தியாவாலேயே பேசஇயலாது போயுள்ளது. இதனை இந்தியாவின் முக்கிய ஆங்கில நாளிதழான “த இந்து” தனது பெரும்பாலும் பழைய நிலையிலேயே – சிறிலங்காவின் அரசுத்தலைவரின் இந்திய வருகை (“More of the same : On the Sri Lankan President’s India visit”) என்ற தனது 18.12.24ஆம்
திகதிய ஆசிரிய தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. கூடவே அதானியின் சிறிலங்காவிலான முதலீடுகள் விடயத்திலும் தேசிய மக்கள் சக்தியினரின் நிலைப்பாட்டை இந்தியாவால் மாற்ற இயலாதிருப்பதையும் கூட்டறிக்கை தெளிவாக்கி இந்தியா இலங்கையில் பொருளாதார ரீதியாகத் தலையிடும் உரிமையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதை உலகிற்குத் தெளிவாக்கியுள்ளது. இந்தியா திருகோணமலையை தனது இந்தியத் துணைக்கண்டப் பிராந்தியத்தில் பொருளாதார மையமாக அமைத்து இணைப்புக்கள் வழி தனது பிராந்திய மேலாண்மையை உறுதிப்படுத்தும் திட்டங்களையோ அல்லது அதானியின் வழி இந்தியா மன்னாரிலும் கொழும்பிலும் மீண்டெழும் சக்திகள் துறையிலோ அல்லது அனைத்துலக வர்த்தக நிலையிலோ தன்னை உறுதிப்படுத்த முயற்சித்து வரும் பொருளாதாரத் திட்டங்களையோ குறித்து கடந்த ஆண்டு யூலையில் ரணில் – மோடி வெளியிட்ட தொலைநோக்குப் பார்வையின் எந்த உடன்படிக்கையிலும் மீள்கையொப்பமிடாது மிகத் தந்திரமாக இந்தியாவை விவசாயத்துறையில் உதவியளிக்கும் பணியாளராக அமைத்துக்கொண்டமை கடந்த வாரத்து அநுர ஆட்சியின் சாதனை நிகழ்வாக உள்ளது. இவ்வாறு தங்களை விட்டுக்கொடுக்காது கொள்கை உறுதிப்பாட்டுடன் இந்தியாவுடன் மட்டுமல்ல யாருடனும் பேசும் ஆற்றல் இன்று உள்ள எந்தத் தமிழ் அரசியல்வாதிக்கும் இல்லை என்பது வேதனையான உண்மை.
மேலும் இந்தியாவில் இருந்து சிறிலங்கா வந்தவுடனேயே சீன அரசியல் குழுவின் முக்கிய ஆலோசகருடன் கொழும்பில் அநுரகுமார திசநாயக்கா நடத்தியுள்ள சந்திப்பும் அதன் தொடர்ச்சியாகப் புதிய ஆண்டு தொடங்கியவுடனேயே சீனாவுக்குச் செல்லவிருப்பதும் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் முன்னைய அரசத்தலைவர்களின் காலங்களில் செய்து கொள்ளப்பட்ட மறைமுக உடன்படிக்கைகளையும் கடந்த சிங்கள இறைமையினை உறுதிப்படுத்தும் துணிவான முயற்சிகளில் இறங்கியுள்ளதும் இவ்வார நிகழ்வுகளாக உள்ளன. இதனால் இந்தியா அதிர்ந்து போயுள்ளதை இந்திய ஊடகங்கள் இவ்விடயத்தில் காட்டிய அக்கறைகள் உலகுக்குத் தெளிவாக்கியுள்ளன. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் ராஜதந்திர உறவாடலைச் செய்ய இயலாதவர்களாக இருப்பது மற்றொரு வேதனை தரும் விடயம்.
சிங்கள முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் படுகொலைகளால் 89000 பேரையிழந்த நிலையிலும் மக்கள் விடுதலை முன்னணி சிங்கள இளையோர்கள் பெண்கள் கிராமமக்கள் இடையிருந்து தமக்கான வாக்குப் பலத்தை மீளப் பெற்றமையே இன்று அதனால் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய பரிணாமத்தில் அரசினையே அமைக்க முடிந்தது. ஆனால் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளால் இத்தகைய மக்கள் மீள்பலத்தை உருவாக்க இயலாமையே இன்று ஈழத்தமிழர்களை சிவிக்தேசியம் என்ற அமெரிக்க வரைவிலக்கணத்துள் அடக்கி அவர்களின் தேசிய நீக்கத்தையும் தாரண்மைவாத தேசப்பற்று என்ற அமெரிக்க சிந்தனையுள் அடக்கி அவர்களின் தாயகம் மீதான இறைமை நீக்கத்தையும் புதிய அரசியல் அமைப்பால் அநுர அரசு உறுதிப்படுத்த முயலும் அபாய நிலை தோன்றக் காரணமாகவுள்ளது.
இந்நிலையிலாவது 2025இல் தேசிய ஒருமைப்பாடு இல்லாது இறைமையை மீளுறுதி செய்ய இயலாது என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழரும் மனதிருத்தி தேசிய ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளில் உடன் இறங்குவோம் என புத்தாண்டு உறுதி மொழி எடுக்க வேண்டுமென்பதே இலக்கின் புத்தாண்டு அழைப்பாகவுள்ளது.
Home ஆசிரியர் தலையங்கம் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்ய இயலாமைக்கான முக்கிய காரணங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...