கடந்த 1944ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி 80 கடற்படை வீரர்களுடன் அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தில் இருந்து கிரேபேக் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டது. ஒரு மாதத்தின் பின்னர் பெப்ரவரி 19ஆம் திகதி இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பான் நாட்டின் இரு கப்பல்களைத் தாக்கி அழித்துள்ளது.
அப்போது கிரேபேக் நீர்மூழ்கிக் கப்பலில் இரு குண்டுகள் மட்டுமே இருந்ததால், கப்பலை திரும்பிவருமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் மார்ச் மாதம் 7ஆம் திகதி வரவேண்டிய நிலையில் திரும்பாது இருந்துள்ளது. அதன் பின்னர் 1944ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி இந்த நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எங்கு தேடியும் அக்கப்பல் கிடைக்கவில்லை.
ஜப்பான் நாட்டுக் கடற்படை, கிரேபேக் குறித்து அளித்த தகவல்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்ததை கடந்த வருடம் ஜப்பான் நாட்டின் ஆராய்ச்சியாளர் யுடாகா இவாசாகி கண்டறிந்தார். அதன்படி கிரேபேக் கடைசியாக நின்ற இடம் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதையும், சரியான இடம் குறித்தும் அவர் தகவல் அளித்தார். இந்த தகவலையடுத்தே ஆழ்கடல் ஆய்வாளர் டிம் டைலர் தலைமையில் ஒரு குழு தேடுதல் வேட்டையில் இறங்கியது.
இந்த தேடுதலில் முதலில் கிரேபேக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இடத்தில் இருந்து 100 மைல் தூரத்தில் 1427 அடி ஆழத்தில் கப்பல் மூழ்கியிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவலை அமெரிக்கக் கடற்படைத் தளபதி றொபேட் நேலந்து அறிவித்துள்ளார்.



