ஈழத்தமிழர் இறைமையே ஈழத்தமிழரின் எதிர்காலம் இன்றே அதனை நிலைநிறுத்த இயன்றது செய்வோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 316

“எங்கள் உரிமைகளே, எங்கள் எதிர்காலம், இன்றே அதனை நிலைநிறுத்துவோம்” (Our Rights, Our Future, Right Now) என்ற செயற்பாட்டு அழைப்பு டிசம்பர் 10ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும அனைத்துலக மனித உரிமைகள் நாளுக்கான இவ்வாண்டுக்கான மையப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
சமுகநீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சக்திவேல் அவர்கள் “தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் என்பது வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அரசியல் களச் சூழ்நிலை அறிந்து எமக்கு இடையில் பலமான அரசியல் கூட்டு கட்டமைப்பை உருவாக்கினால் மட்டுமே நாம் எதிர் நோக்கும் அரசியல் போரினை எதிர்கொள்ள முடியும்” என்ற அனுபவரீதியான கருத்தை ஈழத்தமிழர்களிடை முன்வைத்துள்ளார்.
இந்நேரத்தில் இடம்பெறும் இவ்வாண்டுக்கான அனைத்துலக மனித உரிமைகள் நாளின் மையக்கருத்தை ஒவ்வொரு ஈழத்தமிழரும் தங்கள் நெஞ்சிருத்தி தேசமாக இணைந்து எழுந்து “எங்கள் உரிமைகளே எங்கள் எதிர்காலம் இன்றே அதனை நிலைநிறுத்துவோம்” என அனைத்துலக மனித உரிமைகள் நாளாம் டிசம்பர் 10இல் உள்ளத்தில் உறுதி எடுக்க வேண்டும் என்பது இலக்கின் அழைப்பாக உள்ளது.
அத்துடன் உலகில் மனித உரிமைகளைப் பேணி நிலை நிறுத்த விரும்பும் ஒவ்வொரு நாடும் அமைப்புக்களும் மக்களும் ஈழத்தமிழர்களுடன் இணைக்கப்படக்கூடிய வலைத்தளத்தை உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இலக்கு இவ்விடத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் 577 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகில் அதிக அளவு மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தைக் குறித்த தெளிந்த அறிவு தேவை என்பதாகும். அப்பொழுதுதான் ஒவ்வொரு மனிதனும் மனித உரிமைகளைப் பேணுவதும் மற்றவர்களைப் பேண வைப்பதும் தனது மனிதக்கடமை என்பதில் உறுதி பெறுவான். அத்துடன் மனித உரிமைகள் வன்முறைப்படுத்தப்படும் பொழுது அதனை மீள்நிலைநிறுத்த ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் போராட வேண்டிய பொறுப்புள்ளவனாக உள்ளான் என்ற அறிவு வளரும் பொழுதுதான் மனித உரிமைக்காப் போராடினால் தான் எந்த மனிதனாலும் தானும் தன்னைச் சுற்றியுள்ளவர்களும் பாதுகாப்பான அமைதியான வாழ்வினை வளர்ச்சிகளுடன் வாழ முடியும் என்கின்ற உண்மையும் தெளிவாகும். இவற்றை ஈழத்தமிழ் மாணவரிடையும் மக்களிடையும் மனித உரிமைக்கல்வியால் முன்னெடுக்க முயற்சிகள் எடுக்கப்படல் அவசியம் என்பது இலக்கின் கருத்து.
ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை என்பது அரசியற் பிரச்சினையல்ல மனித உரிமைப் பிரச்சினை என்பது தெளிவாக்கப்படாததினால்தான், சிறிலங்காவின் இறைமையை மீறி உலகநாடுகளும் அமைப்புக்களும், ஈழத்தமிழர் பிரித்தானிய காலனித்துவ அரசால் உருவாக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற கொடுங்கோன்மை ஆட்சியில் கடந்த 76 ஆண்டுகளாக அனுபவித்து வரும் இனஅழிப்பு இனத் துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு வாழ்வில் இருந்து, அவர்களை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் விடுவிக்க இயலாதுள்ளது.
பிரித்தானிய காலனித்துவ அரசால் தோற்றுவிக்கப்பட்டு காலனித்துவத்தால் தீர்க்கப்படாத அனைத்துலக நாடுகளின் மன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய அனைத்துலகப் பிரச்சினையான ஈழத்தமிழர் தங்களின் இறைமையை மீள் உறுதிப்படுத்தல் முயற்சிகளை மனித உரிமைக்கான போராட்டமாக உலகுக்கு வெளிப்படுத்தாது,
தேசியப் பிரச்சினையை மொழிப்பிரச்சினை, இனப்பிரச்சினை மதப்பிரச்சினை என்ற தவறான விளக்கத்துடன் வெளிப்படுத்தும் வரை ஈழத்தமிழர்களை அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தால் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகச் சட்டங்களாலும் பாதுகாக்கப்பட முடியவே முடியாது.
ஈழத்தமிழர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் இலங்கைத்தீவில் நவீன அரசியலில் யாழ்ப்பாண அரசாக உலகால் அடையாளப்படுத்தப்பட்ட அந்தத் தங்களின் தாயகத்தில் 22.05. 1972 முதல் சிறிலங்கா தங்களின் உள்ளக தன்னாட்சி உரிமையினைத் தனது தன்னிச்சையான அரசியலமைப்பால் மறுத்து, ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் இணைத்த பிரித்தானிய காலனித்துவ அரசின் சோல்பரி அரசியல் யாப்பின் 29(2) விதியை வன்முறைப்படுத்தியதால் ஈழத்தமிழர்கள் பிரித்தானியக் காலனித்துவ அரசிடமிருந்து தங்களிடமே மீண்டு விட்ட தங்களின் மக்கள் இறைமையின் அடிப்படையில், தங்களை உலகின் அரசற்ற தேசஇனமாக வெளிப்படுத்தித் தங்களின் மக்கள் இறைமையின் அடிப்படையில் தங்களின் வரலாற்றுத் தாயகமான இலங்கையின் வடக்கு கிழக்கில் தங்களின் ஈழத்தமிழ்த்தேசியத்தைப் பேணி தங்களின் எவராலும் பிரிக்க இயலாத தங்களின் தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்தித் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான வளர்ச்சிகளுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கான மனித உரிமை பேணும் முயற்சியே ஈழத் தமிழர் தேசியப் பிரச்சனை.
சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழரின் தங்கள் மண்ணின் மேலான ஆக்கிரமிப்பில் இருந்து தங்களின் மண்ணையும் மக்களையும் விடுவித்தல் என்கிற அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைவான அரசியற் செயற்பாடே ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை. தங்கள் மண்ணில் தங்களை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு மூலம் வாழவிடாது தடுத்து தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி மக்களை மண்ணை விட்டு வெளியேறச் செய்து தங்களின் நிலத்தை அபகரிக்கும் சிறிலங்கா என்னும் ஆக்கிரமிப்பு அரசில் இருந்து தாங்கள் விடுபட்டு பாதுகாப்பான அமைதி வாழ்வு வாழ்வதற்கான மனித உரிமைப் போராட்டமே ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம்.
இது பிரிவினையும் அல்ல பயங்கரவாதமும் அல்ல என்பதை இரத்தம் சிந்திய போராட்ட அனுபவத் தின் வழி மக்களால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி தெளிவாக உணர வேண்டும். பிரித்தானிய காலளித்துவம் உருவாக்கிய சிலோன் என்னும் ஒற்றையாட்சி நாடாகவோ சிலனிஸ் என்ற செயற்கைத் தேசியமாகவோ இலங்கைத் தீவின் மக்கள் என்றும் இருந்ததில்லை. 176 ஆண்டுகளாக பிரித்தானியரால் சிலோன் தேசியம் என்று ஒன்றை உருவாக்க இயலவில்லை என்பது வரலாறு. எனவே பிரித்தானியக்காலனித்துவ சிந்தனையின் நீட்சியான சிறிலங்கா என்ற ஒற்றையாட்சி நாடாகவோ சிறிலங்கன் என்ற தேசியமாகவோ இலங்கைத் தீவும் இருந்ததில்லை. இலங்கைத் தீவின் மக்களும் இருந்ததில்லை. இந்த உண்மையை மனதிருத்தி சான்றாதரங்களுடனும் ஆராய்ச்சியுடன் கூடிய அணுகுமுறையுடனும் இலங்கைத் தீவினதும் இலங்கைத் தீவின் மக்களதும் பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சிகளையும் மக்களின் ஆட்சியமைப்புக்களின் உறுதிப்பாட்டையும் முன்னெடுக்க விரும்பும் இன்றைய அரசத்தலைவரும் இன்றைய பிரதமரும் ஈழத்தமிழர்கள் குறித்த சான்றாதரங்களையும் ஆராய்ச்சிகளையும் கவனத்தில் எடுத்து ஈழத்தமிழர்களின் இலங்கைத் தீவின் இருப்பு மக்கள் தொகை சார்ந்ததல்ல. நிலத்தின் மீதான உரிமை சார்ந்தது. யாழ்ப்பாண அரசு-வன்னியரசு என்ற ஆட்சிப்பரப்பில் உள்ள நிலங்களையும் கடலையும் கொண்டது ஈழத்தமிழர் தாயகம் என்ற உண்மையின் அடிப் படையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமைகளை அமைத்தால்தான் அது இலங்கைத் தீவுக்கான உண்மையான பலத்தை அளிக்கும்.
ஈழத்தமிழர் இறைமையுள்ள தாயகமாம் வடக்கு கிழக்கில் தாங்கள் பாதுகாப்பான அமைதியுடனும் வளர்ச்சிகளுடனும் வாழ்ந்து இலங்கைத் தீவின் அனைத்து மக்களுடனும் இணைந்து இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை வளர்த்து சமத்துவ சகோதரத்துவ சுதந்திரத் தீவாக இலங்கைத் தீவை இலங்கைத் தீவின் மக்கள் ஒவ்வொருவரும் பேணிட ஒருவருக்கு ஒருவர் துணை நின்றாலே இலங்கைத் தீவு இன்று எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும். உலகின் கலப்பு போர் முறைமைகளில் இந்து மாக்கடலின் முக்கிய தீவு என்ற நிலையில் இலங்கைத் தீவு அனுபவிக்க கூடிய வல்லாண்மை பிராந்திய மேலாண்மைப் போட்டிகளில் இருந்து இலங்கைத் தீவு பாதுகாப்புப் பெறும் என்பது இலக்கின் உறுதியான எண்ணம்

Tamil News