காலிஸ்தான் போராட்ட அமைப்பாளர் இந்தர்ஜீத் கோசல் கனடா காவல்துறையினரால் கைது

கனடாவில் உள்ள கோயிலில் கடந்தவாரம் இந்துக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவுபோராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்தர்ஜீத் கோசலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கனடாவின் டொராண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் இந்து மகா சபைக்குசொந்தமான கோயில் உள்ளது. இங்கு, இந்திய தூதரகம் சார்பில் இந்தியர்களுக்கு சான்றிதழ் வழங்கசிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் திங்கள்கிழமை காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது, இந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் மீது அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பீல் மண்டல காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில்,

இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் பிராம்ப்டனைச் சேர்ந்த இந்தர்ஜீத் கோசல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஒரு சில நிபந்தனைகளின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். ஓன்டாரியோ நீதிமன்றத்தில் கோசல் ஆஜர்படுத்தப்படுவார். இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.