தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள்: எம்.கே. சிவாஜிலிங்கம்  கருத்து

தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். நாங்கள் ஐந்து கட்சிகள் ஒன்றாக கூட்டணியாக இருக்கின்றோம். தமிழ்த் தேசிய அரசியல் பலம் பெற வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளரும் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி பிரதேசத்தில் சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரும் பரப்புரை நடவடிக்கைகள் கூட்டணி ஆதரவாளர்களால் நேற்றைய தினம் (04) திங்கட்கிழமை காலை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நேரில் பார்வையிட்ட பின்னர்  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளரும் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம்  கருத்து தெரிவிக்கையில்,

வடமராட்சி பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருகின்றோம். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். நாங்கள் ஐந்து கட்சிகள் ஒன்றாக கூட்டணியாக இருக்கின்றோம். தமிழ்த் தேசிய அரசியல் பலம் பெற வேண்டும். தெற்கிலங்கையின் மாற்றம் என்ற மாயைக்குள் தமிழ் மக்கள் கரைந்து போகாது தமிழர் பிரதிநிதித்துவத்தை தமிழ்த் தேசிய தரப்புகளுக்கே இம்முறையும் வழங்க வேண்டும்.

ஊழலுக்கு எதிரானவர்களாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள அனுர குமாரதிசநாயக்க அரசு தெற்கில் இடம்பெற்ற ஊழல் விடயங்களை கையில் எடுத்துள்ள அதே நேரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டும்காணாதுள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகளில் செயற்பட்டு வரும் கடந்த அரசுகளுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றிருந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், பிள்ளையான போன்றவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அங்கஜன் இராமநாதன் கடந்த காலத்தில் வேலைவாய்ப்பு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை பெற்றுக் கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட எமது மக்களை ஏமாற்றியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் தனக்கு ஆதரவானவர்களை கடற்றொழிலாளர் அமைப்புகளில் பொறுப்புகளுக்கு கொண்டுவந்து அதன் மூலமாக பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. தடைசெய்யப்பட்ட சுருக்குவலை உள்ளிட்ட தொழில்கள் தங்கு தடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதன் மூலம் பெரும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மீனவ சமூதாயத்தினர் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இவை மட்டுமல்ல இவர்கள் மீது பல்வேறு ஊழல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிராக அனுர அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதுள்ளது. பனை அபிவிருத்தி சபையின் தலைவராக செல்வினை நியமித்த சில நாட்களிலேயே அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது அனுரவின் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் தெற்கோடு மட்டுப்படுத்தப்பட்டதாக முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகிறது. தற்போது ரணில் விக்ரமசிங்க எப்படியாவது தான் பிரதமராகிவிட கனவு கான்கிறார். கடந்த 75 ஆண்டுகால சங்கீத கதிரை விளையாட்டை இனிமேலும் ஆட முடியாது. இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு சர்வதே தலையீட்டுடன் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார்.