இந்தியா: கேரள கோயில் திருவிழாவில் வெடி விபத்து: 150 பேர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (அக்.29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இக்கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுகான திருவிழா அங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பட்டாசுகள் கோயில் அருகே உள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது. கோயில் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில், குடோனில் வைக்கப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பற்றி வெடித்து சிதறின. வாணவேடிக்கையின் போது பட்டாசுகளில் இருந்து வெளியான தீப்பொறி குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்த காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திருவிழாவை காண வந்திருந்த மக்களில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் 97 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் உறுதி செய்துள்ளார். அதில் 8 பேருக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.