பாரத் சிறிலங்கா கூட்டாண்மை என்பது ஈழத்தமிழரின் இறைமை ஒடுக்கத்துக்கும் தேசிய நீக்கத்துக்குமான சிறிலங்காவுக்கான பலமான அரசியல் கட்டமைப்பாக மட்டுமல்ல உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பாகவும் உள்ள நிலையில், சிறிலங்காவின் பங்காண்மை நாடுகளும் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பை அதன் தேசிய பாதுகாப்புக்கானதும் ஒருமைப்பாட்டுக்கானதுமான நடவடிக்கைகளென நியாயப்படுத்தி வரும் காலத்தில், ஈழத்தமிழர்களின் இறைமை தாயக தேசிய தன்னாட்சி நிலைகள் மறுக்கப்பட்டு மறக்கப்பட்ட நிலையில், சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் தனது ஏக்கிய இராஜ்ஜியத்துக்கான அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான
சட்டவாக்க அதிகாரத்தை வலுவாக்கச், சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமார திசநாயக்கா நவம்பர் 14ல் பாராளுமன்றத் தேர்தலை நடத்துகின்றார். ஏக்கிய இராஜ்ய-ஒரே ஆட்சி நாடு, அதாவது சிங்கள நாடு, சிங்கள இனத்துக்குரிய நாடு, பௌத்த ஆகமச்சட்டங்களுக்குரிய நாடு இதனை ஏற்று இறைமையற்ற அரசியலுரிமைகளற்ற அடிமைகளாக வாழ விரும்புபவர்களுக்கு இலங்கையர் என்ற சமத்துவ ஆட்சியை ஊழலற்ற வகையில் அளிப்போம் என்பதே இன்றைய புதிய அரசத் தலைவர் அநுரகுமார திசநாயக்காவின் அரசியல் நிலைப்பாடு.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையையும் தேசியத்தையும் முன்னெடுக்கும் வேட்பாளரை இனங்கண்டு வாக்களித்து அந்த வாக்குப்பலத்தால்தான் தம்மைப் பாதுகாக்க வேண்டிய முக்கியமான சனநாயகப் போராட்டக் களமாக சிறிலங்காப் பாராளுமன்றத் தேர்தல் உள்ளது. இதனை உணர்ந்து இறைமையா இல்லை அடிமையா எனத் தங்களுக்குத் தாங்களே தீர்ப்பளிக்கும் நாளாக நவம்பர் 14ஐ அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார தலைமை எண்ணமாகவுள்ளது.
இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் இலங்கைத் தீவின் குடிகள் என்ற வகையில் பாதுகாப்பான அமைதியான வளர்ச்சிகளுடன் கூடிய எங்கள் வாழ்வுக்குத் தனியரசே ஒரே வழி என்பது எமது அரசியல் நிலைபாடு. இதற்குச் சமானமாக நாங்கள் எமது இறைமையுடன் கூடிய தாயக தேசியத்தன்மைகளைப் பேணி எம்மிடமிருந்து பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் எங்களுக்கான வாழ்வை அமைக்கக் கூடிய வேறு முறைமைகளை முன்வையுங்கள் ஆராய்ந்து பார்க்கலாம் என்பதே ஈழத்தமிழரின் நோர்வே சமாதான முயற்சிகளின் பொழுது உலகுக்குத் தெளிவாகக் கூறப்பட்ட தீர்வு முறை. தீர்வு மிகத் தெளிவாக இருந்தும் இதனைத் தமிழ் வேட்பாளர்கள் முன்னெடுக்காது தாங்கள் விரும்பியவாறு எல்லாம் கொள்கை விளக்கம் செய்வதே இன்றைய ஈழத்தமிழரின் தேர்தல் குழப்பநிலைக்குக் காரணம்.
இந்நேரத்தில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் யூலி சங் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மக்களின் வாக்களிப்பு விருப்புக்கு எதிராக அமெரிக்கா செயற்பட மாட்டாதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்குக் இந்த வாரத்தில் கூறியுள்ளமை மிக ஆறுதலளிக்கும் விடயம். இக்கூற்று இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழரின் ஒருமித்த வாக்குப்பலமும், சரியான தெரிவும்தான் அமெரிக்கா உட்பட உலகநாடுகள் உடைய ஆதரவை ஈழத்தமிழர்களுக்குப் பெற்றுத் தரும் ஒரே கருவியாக உள்ளதென்பதையும் உறுதி செய்கின்றது என்பதை இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா பலஸ்தீன இஸ்ரேயல் பிரச்சினையில் கூறும் இருதேசம் ஒருநாடு ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாகாது என்பதையும் தேர்தல் மேடைகளில் எடுத்துரைக்க வேண்டிய தேவையுண்டென்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது. அதாவது சிறிலங்காவின் கட்டமைப்பில் அதன் நிர்வாக சேவைகள் சட்டவாக்க சட்ட அமுலாக்க அமைப்புக்கள் எல்லாமே ஈழத்தமிழர்களின் சனநாயக போராட்ட சத்தியை அழிக்கும் கருவிகளாகவே என்றும் தொழிற்படுகின்றன. இந்நிலையில் இருதேசம் ஒரு நாடு என்பது மற்றொரு இஸ்ரேயலாக 2009 போல சிறிலங்காவை மீண்டும் ஈழத்தமிழரை இனஅழிப்பு செய்விக்கவே உதவும். ஆகவே இருநாடுகள் ஒரு தீவு என்பதே என்றும் ஏற்புடைய தீர்வு என்பதையும் இருநாடுகளும் விருப்பின் அடிப்படையில் இணைந்து இலங்கைத் தீவினதும் மக்களதும் பாதுகாப்பை பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதே இலங்கைத் தீவின் மக்களதும் அனைத்து உலக மக்களதும் பாதுகாப்புடன் கூடிய அமைதிக்கும் வளர்ச்சிகளுக்கும் என்றும் உதவும் என்பதையும், இதுவே இலங்கைத் தீவின் பிரித்தானிய காலனித்துவத்துத்தின் இலங்கைத் தீவின் வருமானம் நிர்வாகம் நீதிமுறைமை குறித்த 1833ம் ஆண்டின் கோல்புறூக் கமரோன் ஆணைக்குழுவின் அரசியல் சீர்திருத்தமான இருநாடுகளை ஒற்றையாட்சியுள்ள ஒருநாடாகவும் இரு தேச இனங்களை இலங்கையர் என்ற ஒரு தேசியமாகவும் செயற்கையாகக் கட்டமைப்பதற்கு முன்னதான வரலாறு முழுவதும் இருந்து வந்த முறைமை என்பதையும், இந்த ஒற்றையாட்சி முறைமையும் ஒரு தேசிய வகைப்படுத்தலுமே இலங்கைத் தீவின் இன்றைய பிரச்சினையான பொருளாதார வங்குரோத்து நிலைக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் சிங்கள அரசுக்களின் இனஅழிப்பையே நாளாந்த வாழ்வாக வதையுறும் நிலைக்கும் முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் காரணமாகின்றது என்பதை உலகுக்கு வெளிப்படுத்த இந்தத் தேர்தல் மேடை பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இலக்கின் விருப்பு. இந்த விருப்பை நிறைவு செய்வதற்கான காலமும் இதுவே என்பதை பிரித்தானிய மன்னரும் பிரதமரும் பசுபிக் சாமோசில் நடந்த 56 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற பொதுநல வாய நாடுகளின் மாநாட்டில் இந்த வாரத்தில் பேசியுள்ள பேச்சுக்கள் அவர்கள் பிரித்தானிய காலனித்துவ காலத் தவறுகளை ஈடுசெய்யும் மனநிலையில் வளர்ச்சி பெறுகின்றனர் என்பதை உறுதிப்படுத்தியதன் வழி உறுதி செய்துள்ளது. “நாங்கள் யாரும் கடந்த காலத்தை மாற்ற இயலாது. ஆனால் அதிலிருந்து கட்டாயமாகப் பாடங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். பொதுநலவாய நாடுகள் எங்கும் பழைய வரலாறு இன்றும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை மக்களுக்குச் செவிமடுக்கும் பொழுது என்னால் உணர முடிகிறது. எனவே எங்களுடைய வரலாறு சரியான தெரிவுகளைச் செய்ய எதிர்காலத்தில் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.” எனப் பிரித்தானியாவின் மாண்பமை மன்னர் 3வது சார்ள்ஸ் அவர்கள் பசுபிக் தேசமான சாமோவில் நடைபெற்ற 56 பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றிய மாநாட்டில் உரையாற்றியுள்ளார். மன்னரின் வரலாற்றின் பாடத்தின் படி வாழுங்கள் என்ற வழிகாட்டலை ஏற்று ஈழத்தமிழர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க உறுதி எடுப்பின் சரியான தெரிவை நிச்சயம் செய்வர் என்பது இலக்கின் உறுதியான எண்ணம். அதே வேளை பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்ராமர் அவர்கள் பிரித்தானிய காலனித்துவ கால ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்தானியா நிதியளிப்பில்லாத “ஈடுசெய்யும் நீதி” தனை வழங்க வேண்டும் என்ற கருத்தைப் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் ஊக்கப்படுத்தியுள்ளார். பொதுநலவாய நாடுகளில் ஒன்றான பகமாசின் பிரதமர் பிலிப் டாவிஸ் “நேரம் வந்துள்ளது. இந்த வரலாற்றுத் தவறை எவ்வாறு எதிர்கொள்வது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். ஈடுசெய்யும் நீதி இலகுவான உரையாடல். ஆனால் முக்கியமானவொன்று” என்று ஏ.எவ். பி செய்தி முகவருக்குத் தெரிவித்துள்ளார். பிரித்தானியா ஈழத்தமிழரின் இறைமையுள்ள நாட்டைக் கைப்பற்றியது என்ற உண்மையை உரக்கச் சொன்னால் அதுவே “ஈடுசெய்யும் நீதி” யாக அமையுமே தவிர வேறு எந்த முயற்சியும் ஈழத்தமிழர்க்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சி ஏற்படுத்திய அரசியல் பாதிப்பை ஈடுசெய்யாது என்பது இலக்கின் உறுதியான எண்ணம். தாயகத்தில் வரலாற்றை மீள்நினைந்து வாக்களிப்பதும், புலத்தில் பிரித்தானியாவை ‘ஈடுசெய்யும் நீதியை’ ஈழத்தமிழருக்கும் வழங்க உழைப்பதும் அநுரகுமார திசநாயக்காவின் ஏக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து ஈழத்தமிழரை மீட்க ஒரே வழியென்பதே இலக்கின் இவ்வாரக் கருத்து.




