மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல்

இந்தியா – இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று இலங்கை  ஜனாதிபதி செயலர் கலாநிதி நந்திக குமாநாயக்கவிடம் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் 61 தமிழக படகுகளை சிறைபிடித்து, 450 மீனவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் 88 மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரைதண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிறைபிடிக்கப்படும் படகுகளை நாட்டுடைமை ஆக்குவது, மீனவர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம் விதிப்பது, அபராதம் கட்டத் தவறினால் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது, அபராதத்தையும், சிறை தண்டனையையும் ஒருசேர விதிப்பது என்பது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இந்திய மீனவர் தரப்பில் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கிடையே, ‘வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தை திரும்ப பெற இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், சிறையில் உள்ளமீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் தொடர்ந்துபோராடி வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக மீனவ பிரதிநிதிகள் டெல்லி சென்று, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து, இலங்கை சிறையில் உள்ளமீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவலியுறுத்தினர்.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரவின் செயலர் கலாநிதிநந்திக குமாநாயக்கவை, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாசந்தித்து  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை  ஜனாதிபதி  மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாக் நீரிணை கடல் பரப்பில் நிலவும் இந்தியா – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இரு நாட்டு மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இந்திய அரசு சார்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள்குறித்தும், திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.