‘நீங்கள் எங்கள் மன்னர் அல்ல’: விடுதலையின் அடங்காப் பெருநெருப்பு..!

*உலகின் பல நாடுகளில் பிரிட்டன் காலனி ஆதிக்க குடியேற்றத்தின் போது, அமெரிக்காவின் பழங்குடிகளான செவ்விந்தியர்களும் நியூசிலாந்தின் பூர்வ குடிகளும் அவுஸ்திரேலியாவின் பழங்குடிகளும் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களது நிலங்களும் காடுகளும் மலைகளும் அபகரிக்கப்பட்டன . ஆண்டுகள் கடந்த கடந்தாலும் வந்தேறிகள் நிகழ்த்திய அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் படுகொலைகளையும் இந்த நாடுகளில் உள்ள பழங்குடிகளும் பூர்வ குடிகளும் மறப்பதாயில்லை.

அடக்குமுறைக்கு -ஆக்கிரமிப்புக்கு எதிரான கோபம் ,அடங்காப் பெரு நெருப்பாக எப்போதும் அவர்கள் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கிறது . இந்த நிலையில் – இங்கிலாந்து மன்னராக முடி சூட்டிக்கொண்ட பின் முதல்முறையாக மூன்றாம் சார்லஸ் தனது மனைவி இராணி கமலா பார்க்கருடன் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நேற்று (21-10-2024)இவர் அவுஸ்திரேலியா  பாராளுமன்றத்தில் உரையாற்ற வந்தபோது, அவுஸ்திரேலியா  பழங்குடியைச் சேர்ந்த “லீடியா தோர்ப் “என்ற பெண் எம்பி மன்னருக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினார். “….நீங்கள் எங்கள் மன்னர் அல்ல இது உங்கள் நிலமுமல்ல ..! …எங்கள் மக்களுக்கு எதிராக நீங்கள் இனப்படுகொலை நிகழ்த்தினீர்கள்…! .. எங்கள் நிலத்தை நீங்கள் அழித்து விட்டீர்கள்‌ எங்கள் எலும்புகள் எங்கள் மண்டை ஓடுகள் எங்கள் குழந்தைகள் எங்கள் மக்கள் என எங்களிடம் திருடி சென்றதை திருப்பி கொடுங்கள்.. …எங்களுக்கு இப்போதே இதுகுறித்து ஒரு உறுதியான ஒப்பந்தம் வேண்டும்..!” “லீடியா தோர்ப் “பின் இந்த கண்டன முழக்கத்தால் அவுஸ்திரேலியா பாராளுமன்றமே அதிர்ந்தது. பாதுகாவலர்கள் பழங்குடி பெண் எம்பி யை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள்.

இதேபோல – சில மாதங்களுக்கு முன் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 21வயதான “மை பி கிளார்க்” எனும் பெண் எம்பி , அவர் சார்ந்த “மவுரி” பழங்குடி சமூகத்தின் வழக்கப்படி ஆக்கிரமிப்புக்காரர்களுக்கு எதிராக அவர்களின் பழங்குடி மொழியிலேயே போர் முழக்கம் செய்தார்.

இந்த இளம் எம்பி யின் ஆவேசப் போர் முழக்கம் அப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

பவா சமத்துவன், வட தமிழ்நாடு மக்கள் முன்னணி, சென்னை.