ஐ.நாவின் ஏமாற்றுத்தனம் அம்பலம் – அமைதிப் பணிக்கு செல்கிறது சிறீலங்கா இராணுவம்

சிறீலங்கா படையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்படையின் பணிகளில் இணைத்துக் கொள்வதில்லை என ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்த கருத்து மற்றுமொரு ஏமாற்றுத் தனம் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணுவத்தின் 243 படையினர் மாலி நாட்டில் அமைதிப்பணியில் ஈடுபடும் நோக்கத்துடன் எதிர்வரும் 12 ஆம் நாள் செல்லவுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த படையினரின் அணவகுப்பு மரியாதை ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க்குற்றவாளி என தெரிவிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவின் முன்னிலையில் இன்று (6) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லெப். கேணல், மேஜர் மற்றும் கப்டன் தர அதிகாரிகள் இந்த அணியில் உள்ளதாகவும், அவர்கள் ஒரு வருடம் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சவீந்திர சில்வாவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.நா தாம் சிறீலங்கா படையினரை அமைதிப் பணிகளில் ஈடுபடுத்தப்போவதில்லை என தெரிவித்திருந்தது.

ஆனால் தமது இந்த முயற்சிக்கு ஐ.நா எதிர்ப்புக்களை தெரிவிக்கவில்லை என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.