எமது முடிவை நாங்கள் நாளை அறிவிப்போம் – செல்வம்

சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சி எடுத்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாதென ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று(05)  ரெலோ கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர், தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக கூறியுள்ளது. அதேவேளை நேற்று ரணில் விக்கிரமசிங்க உங்களுடனும், சித்தார்த்தனுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். அப்படியாயின் நீங்களும் இதே முடிவைத் தான் எடுத்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி செய்தி தவறானது. எனக்கொரு ஆதங்கம் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

அதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களின் திறமையின் அடிப்படையில் இந்த ஐந்து கட்சிகளையும் ஒன்றாக சேர்த்திருக்கின்றார்கள்.  அதேபோல இந்த ஐந்து கட்சிகளும் ஒன்றாக ஒரு கருத்தை வெளியிட்டால் மிகச் சிறப்பாக, மக்களுக்கு ஒரு சந்தோசமாக மக்கள் தங்கள் வாக்குகளை போட வழிவகுத்திருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்து இந்த அறிவித்தலை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்களும் கட்சியில் பல தீர்மானங்களை எடுத்திருந்தோம். கட்சிகளின் ஒற்றுமை கருதி நாங்கள் வெளியில் சொல்வதில்லை.

அவர்கள் ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது, நாங்கள் தீர்மானம் எடுத்திருக்கின்றோம். அந்த தீர்மானத்தின்படி நாங்கள் எங்களின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து எங்கள் முடிவை அறிவிக்க இருக்கின்றோம் என சொல்லியிருக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் இந்த விடயம் கவலை தருகின்றது என்றும் அதனால் நாளைய தினம் எங்களுடைய கட்சியின் முடிவை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம் என்றும் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.