இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்.
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சில “இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இஸ்ரேலியர்கள் விழிப்புடன் இருக்கவும், அரசின் உத்தரவுகளை சரியான முறையில் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் செய்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும், இதற்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும், ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேல் விமானப்படை வழியிலேயே தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசிக்க இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.



