தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது- பொதுவேட்பாளர் அரியநேத்திரன் தெரிவிப்பு

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது எனவும் எங்களுடைய மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் எனவும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘தென்பகுதியில்  பிரசாரம் செய்வதற்கு 24 மாவட்டங்கள் இருக்கின்றது. ஆனால் நாங்கள் வடக்கு கிழக்கிலே 8 மாவட்டங்களில் மட்டும் தான் பிரசாரப்பணியை மேற்கொள்கிறோம்.

ஆனால்  தென்பகுதி வேட்பாளர்கள்- யாழ்பாணமாக இருக்கலாம், மட்டக்களப்பாக இருக்கலாம், திருகோணமலையாக இருக்கலாம்,  இங்கும்  வருகின்றார்கள். தங்கள் மனைவிகளை அனுப்புகின்றார்கள், பிள்ளைகளை அனுப்புகின்றார்கள், அவ்வாறு அனுப்பி எங்கள் வாக்கை சிதரடிப்பார்கிறார்கள். தமிழ் மக்கள் என்ன சிந்திக்க தெரியாதவர்களா? அல்லது வடக்கு கிழக்கு மக்கள் அவர்களது கோரிக்கையை நம்புவதற்கு எங்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மையாக இருக்கிறது.அவர்கள் முகவர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

முகவர்களாக செயற்படுகின்றவர்கள் ஒன்றை உணர வேண்டும். தமிழ் மக்களுக்கான நீண்ட கால தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது இந்தமுறை ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த செய்தியை சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு எடுத்த முயற்சியை இவர்கள் சிதைக்கின்றார்கள்.

நான் 8 மாவட்டத்திலும் பிரசாரப்  பபணிகளை மேற்கொண்டுள்ளேன் . 8 மாவட்ட மக்களும் தெளிவாக இருக்கின்றார்கள். இந்த முறை நாங்கள் எல்லோருமே சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்’ என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்  தெரிவித்துள்ளார்.