நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் மலையக மக்களும்: துரைசாமி நடராஜா

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின்  முரண்பட்ட கருத்துக்கள் - தமிழ்வின்

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் வரலாறு மிகவும் கசப்பானதாக அமைந்திருக்கின்றது.வரலாற்றில் தொடர்ச்சியாகவே அவர்கள் மீதான நெருக்கீடுகள் இடம்பெற்று வந்துள்ளன.சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் காணப்பட்டபோதும் அவற்றின் வலுவிழந்த தன்மையையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.இந்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை இந்திய வம்சாவளி மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு ஒரு பாதுகாப்பாக அமையும் என்ற கருத்து நிலைப்பாடு காணப்பட்டது.எனினும் இதனை தகர்த்தெறியும் வகையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் இம்மக்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது மட்டுமன்றி பல்வேறு உரிமை மீறல்களுக்கும் இவர்கள் உள்ளானமை யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்திய வம்சாவளி மக்கள் இந்நாட்டில் 200 வருடங்களை பூர்த்தி செய்துள்ளனர்.எனினும் இம்மக்கள் வாழ்வியலின் ஒவ்வொரு கட்டங்களிலும் பல்வேறு சவால்களுக்கும், இடையூறுகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தமை துரதிஷ்டவசமானதேயாகும்.இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரும் சுதந்திரம் பெற்ற பின்னரும் இது நடந்தேறியுள்ளது.இவற்றின் தழும்புகள் இன்னும் கூட தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.1920 களின் பிற்பகுதியில் சர்வசன வாக்குரிமை குறித்தும், அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதங்கள் இடம்பெற்றன.இதன்போதிருந்தே தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சிங்கள பூர்ஷ்வாக்களின் தாக்குதல் ஆரம்பித்தது.தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்றியமையாதவர்கள்.ஆனால் அரசியல் செயற்பாட்டுக்கு அல்ல.அடிமைகளுக்கு சமமாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.ஆனால் அவர்கள் வாக்குரிமை பெற்று தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்திய தேர்தல் தொகுதிகளில் சிங்களவர் சிறுபான்மையினராகிவிடுவர் என்ற அச்சத்தை சிங்கள பூர்ஷ்வாக்கள் தமது பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக கலாநிதி குமாரி ஜெயவர்த்தனா தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

  இனவாதப் பிரசாரம்

இந்தியர்களின் வாக்குரிமையால் தாம் செயலற்று போய்விடக்கூடும் என்ற எண்ணம் கொண்டவர்களாக பெரும்பான்மையினர் பலர் காணப்பட்டனர்.டொனமூர் ஆணைக்குழுவினுடைய சிபாரிசில் அபாய அறிவித்தலாக அமைந்தது இந்தியத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமையளிக்கும் பிரேரணையேயாகும்.இந்தியாவைப் பொறுத்தவரையில் சிங்களவர் சிறுபான்மையினர் மாத்திரமின்றி அநீதிக்குப் பலியாவர் என்று டி.எஸ்.சேனநாயக்கா பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.இதேவேளை இலங்கையின் நிலையான மக்களை செயலறச் செய்யக்கூடிய இந்திய அச்சுறுத்தல் பற்றிக் கூறிய சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா, இந்தியரின் வாக்குரிமையை எதிர்க்காதார் துரோகிகள் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில் சிங்கள பத்திரிகைகளில் ஒரு பகுதி இனவாதப் பிரசாரத்தை விரைவுபடுத்திய அக்காலத்தில் (1928 இல்) ‘பிரைஸ்’ பூங்காவில் காந்தி சங்கத்தின் கூட்டமொன்றுக்கு தலைமை வகித்த ஏ.ஈ.குணசிங்கா இந்தியத் தொழிலாளர்களின் உரிமைக்கு சாதகமாகக் குரல் கொடுத்தார்.சிங்களத் தலைவர்களை குணசிங்கா தாக்கியது பற்றி சிலோன் டெய்லி நியூஸ் ( Ceylon Daily News)1928.செப்டம்பர் 10 ம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.இத்தகைய போக்குகளுக்கு மத்தியில் இன ஒற்றுமை, வர்க்க ஒருமைப்பாடு ஆகியவற்றை தமது அடிப்படை கொள்கைகளாகக் கொண்டிருந்த தொழிற்சங்கத் தலைவர் ஏ.ஈ.குணசிங்கா இந்தியத் தொழிலாளர்களின் வாக்குரிமையை ஆதரித்து குரல் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இத்தகைய பல வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்திய வம்சாவளி மக்கள் வாக்குரிமையை பெற்றுக் கொண்டமை ஒரு மகிழ்ச்சிக்குரிய விடயமேயாகும்.

இதனிடையே 1947 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் சிங்கள இனவாதிகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.இலங்கை இந்திய காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஏழு உறுப்பினர்களை பெற்றுக் கொண்ட நிலையில் , காங்கிரஸ் போட்டியிடாத தொகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இடதுசாரிகளை ஆதரித்திருந்தனர்.இந்தியத் தொழிலாளர்களின் ஆதரவுடன் 14 தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.1947 ன் பாராளுமன்ற தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் 12 இல் இருந்து 20 ஆக அதிகரித்தது.தோட்ட, நகர்ப்புற தொழிலாளர்களின் புரட்சிகரக் கூட்டு சிங்கள பூர்ஷ்வாக்களுக்கு மென்மேலும் அச்சமூட்டியது.இத்தகைய நிலைமைகள் ஐ.தே.க.வின் கண்களை உறுத்திய நிலையில் இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை மற்றும் பிரசாவுரிமை என்பவற்றை 1948 இல் ஐ.தே.க.  பறிப்பதற்கும் இது உந்துசக்தியானது.

1948 இல் சோல்பரி யாப்பு நடைமுறைக்கு வந்தது.இந்த யாப்பின் ஊடாக சிறுபான்மையினரின் நலன்களை பேணும் நோக்கில் சில ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.அரசியலமைப்பின் 29 ஆவது பிரிவு, செனட் சபை, நியமன உறுப்பினர்கள், பல அங்கத்தவர் தேர்தல் தொகுதி, கோமறைக் கழகம், அரசியலமைப்பைத் திருத்துவதில் 2/3 பெரும்பான்மை, பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு போன்றன சிறுபான்மையினரின் நலன்களை பேணும் நோக்கில் உள்ளீர்க்கப்பட்டன.சோல்பரி அரசியலமைப்பின் 29 வது பிரிவு ஒர் இனத்தையோ அல்லது மதத்தையோ அல்லது ஓர் சமூகத்தையோ பாதிக்கக்கூடிய எந்தச் சட்டங்களையும் பாராளுமன்றம் இயற்றக்கூடாது என்பதனை வலியுறுத்தி இருந்தது.எனினும் இந்த ஏற்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்தது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த சோல்பரி யாப்பின் 29 ம் பிரிவின் நம்பகத்தன்மை, இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதுடன் கேள்விக்குறியாகியது.அரசாங்கத்துடன் இணைந்திருந்த தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு அதனை தடுத்து நிறுத்தும் வல்லமை இருந்தது.ஆனாலும் இடதுசாரிக் கட்சிகளும், தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தமிழர்களும், இந்திய தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் மட்டுமே தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.இதேவேளை ஒற்றையாட்சி அரசாங்க முறையினை சோல்பரி அரசியல் யாப்பு சிபாரிசு செய்தமையினால் சிறுபான்மை இனங்கள் ஆட்சியதிகார கட்டமைப்பில் கேள்விக்குறியானமை நோக்கத்தக்கதாகும்.

சோல்பரியின் 29 ஆவது பிரிவு

1956 ம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் முன்வைக்கப்பட்டது.இச்சட்டம் நாட்டில் பல அதிர்வலைகளையும் தோற்றுவித்திருந்தது.’தனிச் சிங்களம் எனும் கொள்கை இந்த நாட்டில் பொது வாழ்க்கையில் தமிழ் மொழியை அதற்குரிய ஸ்தானத்தில் இருந்து வெறுமனே விலக்கி வைப்பதை மட்டும் கருதவில்லை.ஆனால் அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்களை இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்க்கை என்பவற்றில் இருந்தே வெளியே தள்ளி வைக்கிறது’ என்ற கருத்து பலமாக அப்போது ஓங்கியொலித்தது.அரசாங்க தொழில் நிலைகளில் தமிழர்களின் ஆதிக்கம் குறைவடைவதற்கும் இது வலுசேர்த்தது.குறிப்பாக 1956 இல் நிர்வாக சேவையில் 30, எழுதுவினைஞர் சேவையில் 50, பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியர்கள் 60, ஆயுதப்படை சேவை 40 வீதம் என்றவாறு தமிழர்களின் பிரதிநிதித்துவம் அமைந்திருந்தது.இந்நிலையானது 1970 இல் மேற்கண்ட துறைகளில் முறையே 5, 5, 10, 1 வீதமாக வீழ்ச்சி காண்பதற்கு தனிச்சிங்கள சட்டம் காரணமாக அமைந்தது.சோல்பரியின் 29 ஆவது பிரிவு எந்தவோர் இனமும் இன்னொரு இனத்தினால் ,தீமைக்கோ அல்லது அவமதிப்பிற்கோ ஆளாக முடியாது என்று வகுத்திருந்தது.இருப்பினும் இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமை பறிபோவதையோ, தனிச்சிங்கள சட்டத்தையோ இதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 1978 ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டது.இம்முறைக்கு சார்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.பாராளுமன்றத்தினால் கட்டுப்படுத்தப்படாத வகையில் நிர்வாகத்துறை இருப்பதனால் அபிவிருத்தி வேலைகளுக்கு இந்நிலை உதவக்கூடியதாக உள்ளது.ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரமானது நிர்வாகச் செயற்பாடுகளில் காலதாமதத்தை தவிர்ப்பதற்கு உதவுகின்ற ஒன்றாக உள்ளது.ஜனாதிபதி தேர்தல் முறை அதிகளவில் ஜனநாயகத் தன்மை வாய்ந்த தேர்தல் முறையாக உள்ளது என்றெல்லாம் சாதக விளைவுகள் எடுத்துக் கூறப்பட்ட நிலையில் சிறுபான்மையினரின் நலன்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.இதற்கேற்ப ஜனாதிபதியானவர் நாட்டில் வாழும் முழு மக்களினாலும் தெரிவு செய்யப்படக் கூடிய ஒருவராக இருப்பதனால் வாக்குகளை கவனத்திற்கொண்டு சிறுபான்மை இனங்களின் நலன்களை குறைந்த மட்டத்திலாவது பேணக்கூடியவராக இருப்பார் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டது.எனினும் இது நன்மைபயப்பதாக அமையவில்லை.

 அதிகாரம் மிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை முறைமை மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையும் என்று சிலர் நம்பியபோதும்,உண்மையில் 1982 இல் சிறுபான்மை மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஆட்சிக்கு வந்த பின்னரே 1983 ம் ஆண்டு இனக்கலவரம் இடம்பெற்றது என்பதும் தெரிந்ததேயாகும்.இதேவேளை சோல்பரியின் சிறுபான்மைக் காப்பீடு நடைமுறையில் இருந்த 1956, 1958, 1960 ம் ஆண்டுகளிலும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நடைமுறையில் இருந்த 1981, 1983, 1986 போன்ற காலப்பகுதி உள்ளிட்ட இன்னும் சில காலப்பகுதியிலும் இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அவ்வப்போது இடம்பெற்றமை நீங்கள் அறிந்ததேயாகும்.இதைப்போன்றே நிறைவேற்று ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கு மக்களும் சொல்லொணா துன்ப துயரங்களை அனுபவிக்க நேர்ந்தமை புதிய விடயமல்ல.

   செயல்வடிவம் தேவை

இதேவேளை சர்வதேச ரீதியாக 20 ம் நூற்றாண்டில் இடம்பெற்ற சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சமுதாய உரிமையை சட்ட ரீதியாக இல்லாமல் செய்தது இலங்கையின் சுதந்திரத்தின் மறுபக்க விளைவாகும்.இதன் மூலம் ஏறக்குறைய 90,000 பேருக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட்டது.இதனால் இவர்கள் நாடற்றவர்கள் என்ற நிலையிலும் இந்நாட்டில் அரசியல் அதிகாரமற்ற அநாதைகளாகவும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.அரசாங்க தொழில்கள் மறுக்கப்பட்டதுடன் உரிமைகளைப் பெற்று மேலோங்கி சென்று கொண்டிருந்த ஏனைய இனத்தவர்களால் நசுக்கப்பட்டும் அவமதிக்கப்பட்ட நிலைக்கு மேலாக அநாவசியமான தாக்குதல்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

காலத்துக்குக் காலம் தாக்குதலுக்கு உட்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்களில் ஒரு பகுதியினர் இவற்றில் இருந்து தப்பிக்கொள்ளும் நோக்குடன் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.மற்றுமொரு பகுதியினர் குறிப்பாக சிங்கள மக்கள் செறிவாக வாழ்கின்ற காலி, மாத்தறை, இரத்தினபுரி, பலாங்கொடை பகுதிகளில் சிங்கள மக்களுடன் வாழ்வதற்கு அதீத பிரயத்தனத்தை மேற்கொண்டனர்.தமது பேச்சு மொழியைக்கூட சிங்களமாகவோ அல்லது இலங்கையில் வாழுகின்ற இஸ்லாமியர்கள் பேசும் பேச்சுத் தமிழை வருத்தி உள்வாங்கிக்கொண்டு வாழ வேண்டியவர்களாக தள்ளப்பட்டனர். பல சுமைகளுடன் வாழ்ந்துவந்த சமூகம் அண்மைக்காலமாக ஒரு புதிய பரிமாணத்துடன் வளர்ச்சியடைந்து வருவது போலத் தோன்றுகின்றது.இவ்வளர்ச்சி இயல்பாகவே ஒரு சமூகம் வளர்ச்சியடைந்து செல்லும் செங்குத்தான நிலையில் அளவிடக்கூடியதாகவே இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்று புத்திஜீவிகள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்திய வம்சாவளி மக்கள் அரசியல், பொருளாதார, சமூக,தொழில் ரீதியாக தொடர்ச்சியாக நெருக்கீடுகளுக்கு உள்ளாகி வரும் நிலையில் அவர்களின் உரிமைகள் பலவும் மழுங்கடிப்பிற்கு உள்ளாகும் அதேவேளை அது இச்சமூகத்தின் எழுச்சிக்கும்  முட்டுக்கட்டையாக உள்ளது.இந்நிலையில் அம்மக்களின் மீதான நெருக்கீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அவர்களின் பல்துறைசார் அபிவிருத்திக்கும் வித்திடுவதோடு, தேசிய நீரோட்டத்தில் அம்மக்கள் இணைந்து கொள்ள ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் ஆட்சியாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.மேலும் சிறுபான்மை பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நலன்பேணும் நடவடிக்கைகள் வெறுமனே ஏட்டளவில் மட்டுப்படுத்தப்படாது செயல்வடிவம் மிக்கதாக காணப்படுதலும் மிகவும் அவசியமாகும்.