‘எமது இலக்கை அடையும் வரையில் இராணுவ நடவடிக்கை என அழைக்கப்படும் உக்ரைன் மீதான போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்த உக்ரைன் படைகள், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளை கைப்பற்றியதோடு ரஷ்ய இராணுவ வீரர்களையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறுகையில், “எனது திட்டத்தை நான் முழுமையாக வெளிப்படுத்தவில்லை. விரைவில் அமெரிக்க ஜனாதிபதியிடம் எனது திட்டத்தை எடுத்துரைப்பேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், “ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் நுழைந்தமை எனது திட்டத்தின் ஒரு பகுதி. அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதிகளை தாக்குவதற்கு அமெரிக்காவிடம் அனுமதி கேட்பேன்.
இதன் மூலம் ரஷ்யாவை போர் முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்கமுடியும். இதுதான் எனது யோசனை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் பிரதிநிதிகளிடமிருந்து இவ்வாறான அறிக்கைகளைக் கேட்பது இது முதல் முறை அல்ல” எனக் கூறிய ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “எமது இலக்கை அடையும் வரையில் இச் சிறப்பு இராணுவ நடவடிக்கை என அழைக்கப்படும் உக்ரைன் மீதான போர் தொடரும்” எனக் கூறியுள்ளார்.