இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 5

கொக்குவில் இந்துக்கல்லூரிப் படுகொலை 24 அக்டோபர் 1987

கொக்குவிற் கிராமம் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலக பிரிவினுள் அமைந்துள்ளது. யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாகச் செல்லும் வழியில் ஏறக்குறைய யாழ் நகரிலிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள கொக்குவிற் சந்திக்குக் கிழக்குப் புறமாக கொக்குவில் இந்துக்கல்லூரி அமைந்துள்ளது.

1987 அக்டோபர் பத்தாம் நாள் இந்திய இராணுவத்திற்கும் – புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் ஏறிகணைத்தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள். அத்துடன் தங்களை அகதிகள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டனர்.

1987 அக்டோபர் இருபத்து நான்காம் நாள் காங்கேசன்துறை வீதி வழியாக யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக்கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலைக் கட்டடங்களின் மேல் பீரங்கித்தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

படுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று உள்ளுர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச் ம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம் உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன்,எண்பது பேர் படுகாயமடைந்தனர்.

உரிய முறைப்படி தகனம் செய்வதற்கான சூழ்நிலையில்லாததால் இறந்தவர்களின் சடலங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

நந்தாவில் மேற்கு வீதி, தாவடியைச் சேர்ந்த சின்னத்துரை பஞ்சலிங்கம் என்பவர் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார்,

“எமது இடத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதையடுத்து எமது வீட்டிலிருந்து ஏறத்தாள 500 மீற்றர் தூரத்திலிருக்கும் கொக்குவில் இந்துக்கல்லூரிக்குச் சென்று தஞ்சமடைந்தோம். ஒக்ரோபர் 26 ஆம் திகதி, நாம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையிலிருந்தபோது, கொக்குவில் சந்தியிலிருந்து இந்திப் படையினர் சுடத்தொடங்கினார். என்னுடைய சகோதரி கமலாதேவி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். எமக்கு அருகிலிருந்து மேலும் மூன்று பேரும் கொல்லப்பட்டார்கள். நாம் கொல்லப்பட்ட எனது சகோதரியின் சடலத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, கொக்குவில் இந்துக்கல்லூரிக்குச் சென்று அங்கே தஞ்சமடைந்தோம். அங்கே ஏற்கனவே முப்பது பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களது சடலங்கள் நவம்பர் முதலாம் திகதி படையினரால் எரிக்கப்பட்டன.”

படுகொலை செய்யப்பட்டோரின்  கிடைக்கப்பட்ட விபரம் (இல பெயர் தொழில் வயது)

01 இராசையா பஞ்சலிங்கம், 43
02 இராசையா செல்வராணி, 37
03 இராமு இராசு, கமம்,60
04 நாகரத்தினம் விஜயரத்தினம்,46
05 நடராசா இராசகுமாரன்,44
06 நடராசா இராசராசேஸ்வரி,24
07 நடராசா குணராணி, 35
08 நடராசா தமிழ்ச்செல்வி, மாணவி, 10
09 நடராசா சபேஸ்குமார், மாணவன், 6
10 நடராசா ரமதி, மாணவி,13
11 நடேசு பரமேஸ்வரி, 51
12 நல்லையா பாக்கியம் , 50
13 கந்தையா சங்கரப்பிள்ளை, வியாபாரம், 65
14 கந்தவனம் மகேஸ்வரி, 52
15 குணபாலசிங்கம் பத்மசிறி, மாணவன், 8
16 பரமு தங்கமணி,வீட்டுப்பெண், 24
17 பரமேஸ்வரன் மனோன்மணி, 35
18 பரமேஸ்வரன் மாலினி, 1
19 தர்மலிங்கம் நிசாந்தன், 2
20 துரைச்சாமி குமாரசாமி,முதியவர், 72
21 தம்பிராசா நடராசா முதியவர், 61
22 வேணுகோபால் மகாதேவன், 41
23 மகாதேவன் இராசம்மா,28
24 மகாதேவன் பாலமுருகன், மாணவன், 9
25 மகாதேவன் வேணுகிருஸ்ணா,மாணவன், 7
26 மகாதேவன் விக்கினேஸ்வரன், மாணவன், 10
27 அன்னசிங்கம் கமலாதேவி, வீட்டுப்பணி, 33
28 பெரியதம்பி இராசையா, 30
29 பேராசிரியர் சோ.சந்திரசேகரம், பேராசிரியர்,
30 செல்வநாயகம் மாணிக்கரத்தினம்,முதியவர்,69
31 செல்லர் திரவியம் ,53
32 சுப்பிரால் கோவிந்தசாமி, முதியவர், 72
33 சிவகுரு செல்லத்துரை, முதியவர்,85
34 விஸ்வநாதி விஜயரத்தினம்,கூலி,