ஈழத்தமிழர்களால் தங்கள் இறைமையைத் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அடைந்து கொள்ள இயலாமல் போவதற்கான தலைமைக் காரணியாக இருப்பது ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் நடைமுறைகள் சிறிலங்கா அரசாங்கத்தை மையப்படுத்தியதாக அமைவது என்பது இலக்கின் எண்ணம். இதற்குச் சிறந்த உதாரணம் தற்போது நடைபெறவுள்ள சிறிலங்கா அரச தலைவர் தேர்தல். இந்தத் தேர்தல் ஈழத்தமிழருக்கு எந்தத் தீர்வையும் வழங்காது என்பது உலகறிந்த விடயம். அப்படியானால் ஈழத்தமிழர் இந்தத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது.
ஆனால் இதனை புறக்கணிப்பதா அல்லது பொதுவேட்பாளரை முன்னிறுத்தி இது ஈழத்தமிழர் களால் ஏற்கப்படாதவொன்று என்பதை வெளிப்படுத்துவதா? என்ற கருத்து மோதலையே இன்று காண்கின்றோம். இது சிறிலங்கா நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைமை மூலம் செய்து வரும் ஈழத்தமிழரிடை ஒற்றுமையீனங்களை விரிவுபடுத்தி அவர்களின் இறைமையை ஒடுக்கும் அதன் தலைமை நோக்குக்கு ஈழத்தமிழர்களும் தங்களை அறியாமலே கருத்து மோதல்களால் துணைபோகின்றார்கள் என்பதே நடைமுறை எதார்த்தமாகவுள்ளது.
இந்நிலையை மாற்றுவதாக இருந்தால் முயற்சிகள் இரண்டுமே ஈழத்தமிழர்களுடைய இறைமைக்குச் சான்றாக அமையக் கூடியனவே என்பதை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் இரு தரப்பினரும் மக்களுக்குத் தங்கள் நிலைப்பாடுகளின் நோக்கையும் போக்கையும் தெளிவுபடுத்தல் மூலம் மக்களுக்கு அரசியல் அறிவூட்டலைச் செய்ய வேண்டும். அந்த அரசியல் அறிவூட்டல் மக்களுக்கான வாழ்வுக்கான சத்தியாக மாற்றப்பட வேண்டும்.
இதற்கு புறக்கணிக்கும் மரபு ஈழத்தமிழர் இறைமைக்கான வெளிப்படுத்தல் என்று 22.05.1972 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமாக்கப்பட்டதன் பின்னர் தொடர்வதன் முக்கியத்துவத்தை ஏற்கவேண்டும். அதே வேளை புறக்கணிப்புக்கள் நடைபெற்ற போதிலும் அவை உலகின் கவனத்தை ஏன் கவரவில்லையென்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இனி தற்போது நடைபெறும் புறக்கணிப்பை எவ்வகையில் உலகின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்றும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்தப் புறக்கணிப்பு எவ்வாறு சிங்கள தேசத்தையோ இந்தியக் கூட்டாண்மையையோ அல்லது அமெரிக்க சீன பங்காண்மைகளையோ ஈழத்தமிழர் தேசிய பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்துச் சிந்திக்க வைக்கும் என்பதை விளக்கித் தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு மாற்று வழியாக நோக்கில் மாறுபடாது ஈழத்தமிழர் வாக்குகள் சிங்களக் கட்சிகளுக்குப் போவதைத் தடுப்பதும் ஈழத்தமிழர்களின் அரசியல் குடிசார் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைந்து தேசமாக எழ வைப்பதும் பொதுவேட்பாளர் நியமித்தலின் நோக்கு என்றால் அதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இது எவ்வகையில் ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் இறைமையை ஏற்கவில்லையென்பதை வெளிப்படுத்தும் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இது எந்த வகையில் உலகின் கவனத்தை ஈர்க்கும் இன்றைய உலகில் எதிலும் கூட்டாண்மைகளும் பங்காண்மைகளும் கொண்டே சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக விடுதலைகள் நோக்கிய பயணங்கள் நடைபெறும் நிலையில் ஈழத்தமிழர்கள் ஒற்றுமையாக எவ்வாறு பொதுவேட்பாளர் பின்னணியில் பொதுவெளியில் ஒரு இலக்கில் பல வழிகளில் முரண்பாடுகளைக் கடந்து ஒன்றுபட்டுக் கூட்டாண்மைகளுடனும் பங்காண்மைகளுடனும் பயணிக்கலாம் என்பதைத் தெளிவாக்கி மக்களை ஒருமைப்படுத்த வேண்டும். இதனையே இலக்கு பணிவாக வேண்டி நிற்கிறது. எங்களுக்குள் மோதல்கள் வேண்டவே வேண்டாம்.
யாராலும் இன்றைய உலகில் தனியொரு அமைப்பாகவோ அல்லது கட்சியாகவோ எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண இயலாது. இது உலகின் இன்றைய எதார்த்தம். ஈழத்தமிழர்களாகிய நாம் தாயகத்திலும் நாம் வாழும் அனைத்து நாடுகளிலும் ஒன்றிணைந்தால் எம்மையும் பாதுகாத்து உலகையும் பாதுகாத்து அமைதி வாழ்வைக் கட்டமைக்கும் மதியும் நிதியும் படைத்தவர்கள் எங்களால் இயலாததொன்றுமில்லை. சிறிய மக்கள் தொகையும் சிறிய நிலப்பரப்பும் கொண்ட சிங்கள மக்கள் எவ்வாறு தங்களை உலகிற்கு வேண்டியவர்களாகக் கட்டமைத்து தங்கள் நிலைப்பாடுகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்கின்றார்கள் என்பது எமக்குக் கண்முன்பாகவே உள்ள உதாரணம்.
உள்ளது எதுவோ அதைக் கொண்டு வல்லது செய்தலும் வல்லது எதுவோ அதைக் கொண்டு நல்லது செய்தலும் மனித வளர்ச்சிக்கான படிகள் அதனை விட்டு நேற்றைப் பேசி மகிழ்வது அல்லது ஏங்குவது இனி வேண்டாம். நேற்றின் அனுபவங்கள் இன்று எமக்குப் பலமாகட்டும். நாளையை நினைந்து கனவு காணவும் வேண்டாம். இன்று என்ன பலத்தை வெளிப்படுத்துகின்றோமோ அதுவே நாளைய புதுமையை உருவாக்கும். இதுவே இலக்கின் அழைப்பு. தியாகங்கள் எப்பவும் போற்றப்பட வேண்டியது. நடைமுறைகள் எப்பவும் அந்தத் தியாகங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டியது. நேற்று நடந்தவை மாற்றப்பட முடியாத வரலாறு. இதனைச் சுமந்திரன் போன்ற சட்டத்தரணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒற்றையாட்சி சமஸ்டி எல்லாவற்றையும் கடந்து 1977ம் ஆண்டின் மக்களாணை என்றுமே இனியொரு சுதந்திரமான தேர்தல் இல்லாமல் மாற்றப்பட முடியாதது. தயவு செய்து உண்மையை நேர்மையை அரசியல் படுத்துங்கள். பொய்மைகள் வேண்டாம். திரிபுகளும் வேண்டாம். எந்தக் கெட்டிக்காரன் புளுகும் எட்டு நாட்களுக்குத் தான். உயிராலும் உடல் சிதைவுகளாலும் வாழ்விழப்புக்களாலும் பிறர் வாழத் தம்மை ஈகம் செய்த மரணமற்ற மனிதகுலத்தின் சொந்தக்காரர்கள் நாங்கள். அதன் பிரதிநிதிகளாக உங்களை முன்னிறுத்த முயலும் எவரிடமும் அந்தத் தியாகத்தை உறுதியையே யாரும் எதிர்பார்ப்பார்கள்.
இறுதியாக உலகம் இருபெரும் போர்முனைகளை எந்நேரமும் சந்திக்கும் நிலையிலுள்ளது. இன்றைய உலக அரசியல் ஒழுங்கு என்பது கொந்தளிக்கும் அலைகடலாக உள்ளது. இதன் விளைவு கள் மேற்குலகில் நிறவாதம் இனவாதம் உச்சத்தைத் தொடத் தொடங்கி விட்டதை பிரித்தானிய அதிதீவிர வலதுசாரிகள் நகரகாவலர் மோதல்களும் ஐரோப்பிய அதிதீவிர வலதுசாரிகள் வாக்குப்பலமும் தெளிவு படுத்துகிறது. தாயகத்தில் இருந்து அரசியல் புகலிடம் கோரி புலம் பெயர்ந்த தமிழர்கள் மீளவும் அரசியல் புகலிடம் கோரி ஈழத்தமிழர் தாயகத்திற்கே திரும்பும் காலமும் கோலமும் வேகமாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தாயக ஈழத்தமிழரும் புலத்து ஈழத்தமிழரும் கல்வியால் அறியாமையையும் சமுகமுதலீடுகளால் வறுமையையும் போக்கச் செய்ய வேண்டியவை எத்தனையோ உண்டு. அவற்றைச் செய்வதை விடுத்துச் சிறிலங்காவின் அரசியலில் மயங்குவதே ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையை மீளுறுதி செய்வதில் உள்ள ஒரே தடையென்பதே இலக்கின் உறுதியான எண்ணம்.
Home ஆசிரியர் தலையங்கம் சிறிலங்கா அரசாங்கத்தை மையப்படுத்தி ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்யவியலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...




