கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி அமைத்தல் விவகாரம்: இலங்கைக்கு கனடா பதில்

2024.03.01 Tamil genocide monument 2 e1723691871919 கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி அமைத்தல் விவகாரம்: இலங்கைக்கு கனடா பதில்

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் எமது உள்ளக விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன், இத்தலையீடுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவானதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்டைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் வலியுறுத்தி பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கையின் கடிதத்தின் உள்ளடக்கத்துக்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மேயர் பற்ரிக் பிரவுன், ‘எமது உள்ளக விவகாரங்களில் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘தமிழினப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய குற்றவாளிகளை இலங்கை அரசாங்கம் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கும் வரை உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது. இருப்பினும் இப்போர்க்குற்றவாளிகளை அவர்கள் இழைத்த மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறச்செய்வதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் அவர்களைப் பாதுகாத்துவருகின்றது’ எனவும் மேயர் பற்ரக் பிரவுன் விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் தமிழ் மக்கள் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும், கனடாவில் அவர்களால் (இலங்கை அரசாங்கத்தினால்) அதனைச் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு ‘அவர்கள் கனடாவில் நினைவுகூரல் நிகழ்வைத் தடுப்பதற்கு முயன்றால் அது வெளிநாட்டுத் தலையீடாகவே அமையும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.