நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படாது தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் ஏதிலிகளாகிய நாம் நிரந்தர வதிவிட உரிமை வழங்கக் கோரி அமைதிவழிப் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றோம். எமது போராட்டக்களத்திற்கு அணிதிரண்டு வந்து எமக்கு உறுதுணையாக நிற்குமாறும் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம் என தமிழ் ஏதிலிகள், சிட்னி, அவுஸ்திரேலியா என்ற போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கடந்த செவ்வாய்க்கிழமை(6) தொடக்கம் 29/1 Broadway, Punchbowl, NSW. எனும் முகவரியில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Tony Burke (Minister for Home Affairs of Austrlia) அவர்களின் அலுவலகத்திற்கு முன்பாக ஏதிலிகளாகிய நாம் எமக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கக் கோரி தொடர் 24 மணிநேர அமைதிவழிப் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றோம்.
எமது சொந்த மண்ணில் வாழ நிர்க்கதியற்று அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்துள்ள நாம் கடந்த 12-14 வருடங்களாக நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படாது தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்றோம்.
எமது சொந்த நிலத்திற்கும் மீளத்திரும்ப முடியாத உயிர்ப் பாதுகாப்பின்மை ஒருபுறம் புகலிடக்கோரிக்கைகள் மறுக்கப்பட்டு நிரந்தர வதிவிட உரிமையற்ற அங்கலாய்ப்பு மறுபுறமாக தொடர்ச்சியான உளச்சிதைவுகளால் நாம் துவண்டு போயிருக்கின்றோம்.
போராட்டமே வாழ்வாகிப் போன எமக்கு வேறுவழிகளன்றி எமது இறுதி முயற்சியாகவே இந்த அமைதி வழியிலான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
எனவே எமது இப்போராட்டம் வெற்றியளித்து எமக்குரிய வாழ்வுரிமை கிடைப்பதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினை இருகரம் கூப்பி வேண்டிநிற்பதோடு எமது போராட்டக்களத்திற்கு அணிதிரண்டு வந்து எமக்கு உறுதுணையாக நிற்குமாறும் பணிவாக வேண்டிக்கொள்கின்றோம்.