இந்திய காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வாக 10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளனர்.
இந்த பறவைகள் மனிதர்களை குறிவைக்கவில்லை. ஆனால் இவை பல ஆண்டுகளாக வன உயிரினங்களை வேட்டையாடுவதன் மூலமும், சுற்றுலா பகுதிகளில் தொந்தரவுகள் ஏற்படுத்துவதன் மூலமும், கோழிப் பண்ணைகளைத் தாக்குவதன் மூலமும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகின்றன.
மேலும் இந்த காகங்கள் பெரும்பாலும் வர்த்தகக் கப்பல்களில் பயணம் செய்வதன் மூலம் கண்டம் தாண்டி பரவுகின்றன. இவ்வாறே இந்திய காகங்கள் கென்யாவிலும் பரவியுள்ளன.
ஆனால் அவை 1890களில் பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த சான்சிபார் தீவுக்கூட்டத்தில் பெருகிவரும் கழிவுப் பிரச்னையைச் சமாளிக்கும் முயற்சியில் காகங்கள் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில், கென்யாவில் கொடிய பறவையாக கருதப்படும் இந்த இந்திய காகங்களை கொல்ல முதற்கட்டமாக வாடாமு மற்றும் மலிந்தி ஆகிய நகரங்களில் விஷம் பயன்படுத்தப்படுகிறது.
கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு அருகில் காகங்கள் நடமாடுவதைத் தடுப்பதே இந்த மிகப்பெரிய நடவடிக்கையின் குறிக்கோள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கென்யாவில் இந்த காகங்களைக் கொல்லும் செயலுக்கு விலங்கு மற்றும் பறவை உரிமை ஆர்வலர்களிடமிருந்து கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.