பங்களாதேஷ் வன்முறை : பதவியை இராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்

மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி  பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல்  வெளியாகியுள்ளது.

அதே நேரம் ” பிரதமரும் அவரது சகோதரியும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுள்ளனர்” என்று அந்த வட்டாரம் AFP இடம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பங்களாதேசில் இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 1971-ம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், காவல்துறையினரை ஏவி போராட்டக்காரர்களைக் கொன்றதற்கு நீதி கேட்டு நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். மேலும், பல்வேறு நகரங்களிலும் வங்கதேச போராட்டம் வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.