Home செய்திகள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் – மாவை

படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் – மாவை

யாழ். மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுப்பதற்கும் வேறு அரச காணிகளுக்குச் செல்லவும் இணங்கியிருந்தனர். இப்பொழுது மக்கள் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர், என்றவாறு ஊடகங்களில்செய்திகள் வெளிவந்துள்ளன படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கு இடையுறுகளையும் மறுப்பையும் தொடர்ந்து வெளியிடுட்டு வருவதால் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக அந்தந்த மாவட்டங்களின் ஆளுநர்களும் அவ்வப்பகுதி மக்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் படையினரும் (தளபதிகள்)கலந்து பேசி மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. சில இடங்களில் மக்கள் காணிகள் விடுவிக்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள தனியார் நிலங்கள் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் உள்ள தனியார் நிலங்களுட்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கு இணக்கங் காணப்பட்டது. இவ்விணக்கங்கள் வடமாகாண ஆளுநர், பாராளுமன்றப் பிரதிநிதிகள், படைகளின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில் எட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடப்படவேண்டும். இப்பொழுது அரச படைத்தரப்பினர் தனியார் நிலங்களை விடுவிப்பதற்கு இடையுறுகளையும் மறுப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கங்களுக்கு மாறாக அரசும் படைத்தரப்பினரும் தீர்மானிப்பார்களாயின் எமது பெயர்களில் 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வழக்குகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும். 2007ஆம் ஆண்டு தீர்ப்பானது அரசபடைகள் தனியார் நிலங்களை விடுவிக்க வேண்டும் என்பதேயாகும். அதை விட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட பகுதியின் நிலச் சொந்தக்காரரின் உச்சநீதிமன்றத்திலுள்ள வழக்குகளையும் தொடர்ந்து நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். அதற்கு முன் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்.