வவுனியாவில் நேற்றிரவு நிலநடுக்கம் – பாதிப்புக்கள் எதுவும் இல்லை

இலங்கையில் வடமாகாணத்தில் வவுனியா உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்லகெலே, மஹகனதரவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இருந்த போதிலும் பாதிப்புக்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.