ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை விடுக்கும் கோரிக்கை

யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசும் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய 30இன் கீழ் ஒன்று தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ, கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

எந்தவொரு சர்வதேச சமூகமும் தனக்கு நிபந்தனைகளை விதித்து தன்னைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறிலங்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள நிகழாமை தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளவர் அவரது கொள்கைகளில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் பட்நாயக் கோரிக்கை விடுத்து்ளளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்தமை, இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவியமை, படையினர்வசம் இருந்த தனியார் காணிகள் விடுவிப்பது ஆகிய விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்திருக்கின்ற போதிலும், ஜெனீவா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் ஆபத்தான, மந்த நிலையே இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக போரின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற பாரதூரமான குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி நீதியை நிலைநாட்டும் விவகாரத்தில் தொடர்ந்தும் நிராகரிக்க முடியாது என்றும் மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.