மேற்கு பப்புவாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் 27 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பதற்றம் கொண்ட மேற்கு பப்புவா பிராந்தியத்தில் பெரும்பாலும் பாடசாலை மாணவர்களை கொண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பல கட்டங்களுக்கும் தீமூட்டியுள்ள நிலையில் அங்கு புதிய வன்முறைகள் வெடித்துள்ளன.

இந்த வன்முறைகளில் பிராந்திய தலைநகரான வமெனாவில் குறைந்தது 27 பேர் உயிரிழந்திருப்பதோடு, பற்றி எரியும் கட்டடத்திற்குள் சிக்கிய சிலரும் உயிரிழந்துள்ளனர்.

ஆசிரியரின் இனவாத கருத்து ஒன்றை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் அது ஒரு புரளி என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன் கடந்த ஓகஸ்டிலும் இந்த பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் சுமார் 700 பேர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்தது.

“சிலர் எரிக்கப்பட்டனர், சிலர் வெட்டிக் கொல்லப்பட்டனர், சிலர் தீயில் சிக்கிக் கொண்டனர்” என்று உள்ளுர் இராணுவத் தளபதி சந்திரா டியன்ட்டோ தெரிவித்தார்.

“தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கடைகளில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடியவர்களைத் தேடும் முயற்சியை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

வமொனாவில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாப்புவா மக்களல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மற்ற பகுதிகளிலிருந்து வந்த குடியேறிகளுக்கு எதிரான வன்செயல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தோனேசியா மற்றும் மேற்கு பப்புவாவுக்கு இடையிலான பதற்றம் பல தசாப்தமாக நீடித்து வருகிறது.

முன்னாள் டச்சு காலனியாக இருந்த பப்புவா 1963 வரை இந்தோனேசியாவின் ஓர் அங்கமாக இருக்கவல்லை. அங்கு சிறிய அளவான பிரிவினைவாத போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.