800 ஆண்டுகளுக்குப் பின் வெடித்துச் சிதறிய எரிமலை

ஐஸ்லாந்து தலைநகர் ரேக்யூவீக்கில் அருகே அமைந்துள்ள எரிமலைவெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது. அந்த நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர், ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எரிமலையின் சீற்றத்தை மிக அருகில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வடக்கு அட்லான்டிக் கடலில்ஐஸ்லாந்து தீவு நாடு அமைந்துள்ளது. அங்கு சுமார் 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். எதிரெதிர் திசையில் மோதிக் கொள்ளும் இரு புவி தட்டுகளுக்கு இடையில் ஐஸ்லாந்து அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 3 வாரங்களில் மட்டும் 40,000 நிலநடுக்கங்கள்  நடந்துள்ளன.

இந்நிலையில், எரிமலைவெடித்து சிதறியுள்ளது.

தலைநகர் ரேக்யூவிக்கில் இருந்து 40 கி.மீ. தொலைவில் பேக்ரதால்ஸ்பயாட்ல் என்றஎரிமலை உள்ளது. சுமார் 800ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 19-ம் திகதி  இரவு அந்த எரிமலை வெடித்துச் சிதறியது.

இது சாம்பலையும் புகையையும் அதிகமாக உமிழவில்லை. எனினும் எரிமலையின் லாவா குழம்பு ஆறாக பாய்கிறது. சுமார் ஒரு சதுர கி.மீ. தொலைவுக்கு லாவா குழம்பு பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.