இலங்கையில் கடந்த 6 வாரங்களில் 700க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனது.
கடந்த சில வாரங்களாகவே, இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறு ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து, தற்போது நாடு முழுவதும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, அம்பாறை, ஹட்டன், புத்தளம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் நாளாந்தம் பதிவாகி வருவதை காணக் கூடியதாக உள்ளது.
இந்நிலையில், கடந்த கடந்த சில வாரங்களில் 727 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் எதிர்வரும் புதன்கிழமைக்குள் சட்டத்தை அமுல்படுத்தாவிடின், எரிவாயு சிலிண்டர்களில் முறையற்ற மாற்றத்திற்கு காரணமான அனைவருக்கும் எதிராக பல இடங்களில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் எச்சரித்துள்ளார்.
மேலும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLSI) மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் ( CAA) அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கு அமைவான எரிவாயு மாத்திரமே எதிர்காலத்தில் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.