தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்: யாழில் அஞ்சலி

IMG 20260205 WA0011 தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்: யாழில் அஞ்சலி

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில்  நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர்.

திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால்  சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின்  துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல்  பணிமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி  செலுத்தினர்.