இலங்கை குறித்த தீர்மானத்தை கைவிடுங்கள் – தூதுவர் ரவிநாத அமெரிக்காவிடம் கோரிக்கை

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் மீது எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டாம் என அமெரிக்க வெளிவிவகாரக் குழுவிடம் இலங்கை அவசரக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வாஷிங்டனிலுள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த 18 ஆம் திகதி இலங்கை குறித்த கடுமையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக தற்போது மற்றொரு அவசர கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

“பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் இலங்கை மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை, பக்கசார்பானவை, ஆதாரமற்றவை” எனத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், “இந்தத் தீர்மானம் என்ன நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது” என்பதையிட்டு பாரிய சந்தேகம் எழுந்திருப்பதாகவும் இலங்கை தெரிவித்திருக்கின்றது.

தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஆவணத்தில், குறிப்பிட்ட தீர்மானம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“பாரம்பரிய தமிழர் தாயகம்” எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம், பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுவதுடன், இலங்கையின் தன்மையைக்  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இது சரித்திர உண்மைகளைத் திரிவுபடுத்துவதாகவும், தற்கால யதார்த்தங்களுக்கு முரணானதாகவும் அமைந்திருக்கின்றது. இது இலங்கையைச் சிதைவுபடுத்துவதற்கும் விடுதலைப் புலிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தமது இலக்குகளை அடைவதற்கு ஆதரவாகவே உள்ளது.

சர்வதேச பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போதைய தருணத்தில் ஒரு சூழ்ச்சிகரமானதாகும். ஏனெனில் அரசாங்கம் கடந்த ஜனவரியில் நம்பகத்தன்மையானதும், வெளிப்படையானதுமான ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. 2021 மார்ச் 4 ஆம் திகதி இந்த விசாரணைக்குழுவுக்கு யாரும் எழுத்துமூலமாகவோ அல்லது வேறுவடிவத்திலோ தமது கருத்துக்குளை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தக் குழு விசாரணைகளை முன்னெடுக்கின்றது.”

இவ்வாறு இந்த ஆவணத்தில் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply