இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.