தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமான யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் பூர்த்தி

பெளத்த பேரினவாதத்தின் வன் முறை

1981 ஆம் மே மாதம் 31ஆம் திகதி சிங்கள பெளத்த பேரினவாதத்தின் வன் முறையின் தொடர்ச்சியாக, 1981 ஆம் ஜூன் மாதம் 1ஆம் நாள் இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பின் சாட்சிகளில் ஒன்றாக, யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டு, 41 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது.

இந்த நூலகமானது 1933 ஆம் ஆண்டில் இருந்து உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் கட்டியெழுப்பப்பட்டு, 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

தமிழீழ மக்கள் மத்தியில் மட்டும் அல்லாது உலகத்தமிழர் மத்தியிலும் அழியாக் காயத்தை ஏற்படுத்திய இந்த நூலக எரிப்பு,   ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டது.  தமிழ் மக்களின் அடையாம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.

1981ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை,  நூலகம் எரியூட்டப்பட்ட சம்பவத்தில், இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57,000 நூல்களும் சிறுவர் பகுதியில் 8,995 நூல்களும் உசாத்துணை பகுதியில் கிடைத்தற்கரிய 29,500 நூல்களும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் தென்னாசியாவின் மிகப் பெரிய அறிவியல் பொக்கிஷமாக போற்றப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகத்தின் அழிப்பு என்பது மனித நாகரிகத்தின் மோசமான துயரம்.   இந்த கொடுமை நேர்ந்த போது அதனை சென் பற்றிக்ஸ் கல்லூரியின் மாடியில் இருந்து நேரில் பார்த்த தாவீது அடிகளார் அந்த கணத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News