கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 32 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக சில வீடுகளிற்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை போக்குவரத்து செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கிராமத்தை 6 மாதங்களாக கிராம சேவையாளர் கண்காணிக்கவில்லை எனவும், வெள்ளம் தொடர்பில் அறிவிக்க அழைப்பு ஏற்படுத்திய போதும், அழைப்பினை ஏற்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், பிரதேச செயலாளருக்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். கள விஜயம் மேற்கொண்ட கண்டாவளை பிரதேச செயலாளார் த. பிருந்தாகரன் ஆராய்ந்தார். பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலக தரிசனம் நிறுவனத்தின் உதவியுடன் உடனடி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்காத வகையில் வடிகான்களை அமைக்க மக்கள் வேண்டுகை விடுத்துள்ளனர்.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று நிந்தவூர் நாவிதன்வெளி சம்மாந்துறை பிரதேச பகுதிகளில் வாழும் மக்கள் மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நன்றி-வீரகேசரி