அமெரிக்காவின் வெனிசுவேலா தாக்குதலில் 32 கியூபா நாட்டவர் பலி

அமெரிக்கா வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவை சிறைபிடித்த நடவடிக்கையின்போது, தங்களுடைய குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாகக் கியூபா அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் கியூபாவின் ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இதையடுத்து நாட்டில் இரண்டு நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கியூபா குறுகிய அறிக்கையில், இறந்த கியூபா குடிமக்கள் வெனிசுவேலாவில் என்ன செய்தனர் என்பது குறித்து விரிவாக விளக்கப்படவில்லை. ஆனால், கியூபா மற்றும் வெனிசுவேலா நீண்டகால கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய்க்குப் பதிலாக பாதுகாப்பு தொடர்பான ஆதரவை கியூபா வெனிசுவேலாவுக்கு வழங்கி வருகிறது.

இதனிடையே, கியூபா அதிபர் மிகேல் டியாஸ்-கனெல், வெனிசுவேலாவின் கோரிக்கையின் பேரில், நிக்கோலாஸ் மதுரோவுக்கும் அவரது மனைவிக்கும் தாங்கள் பாதுகாப்பு வழங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து வெனிசுவேலா அரசு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.