3 இலட்சம் பேருக்கு உடனடி உணவுப்பொருள் உதவிகள் வழங்கப்படும் – உலக உணவுத்திட்டம்

இலங்கையில் 73 சதவீதமான குடும்பங்கள் தமது அன்றாட உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்காகப் பல்வேறு மாற்றுவழிகளைக் கையாண்டுவரும் நிலையில், எதிர்வரும் வாரங்களில் 300,000 பேருக்கு அவசியமான உணவுப் பொருட்களை வழங்குவதற்குத் திட்டமிட்டிருப்பதாக உணவு உணவுத்திட்டம் அறிவித்துள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது.

அதேவேளை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்களான உலக உணவுத்திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, யுனிசெப் அமைப்பு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு சர்வதேச பொதுக்கட்டமைப்புக்கள் அத்தியாவசிய உதவிகளை வழங்கிவருகின்றன.

அந்தவகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்போருக்குக் கடந்த மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள உதவிகள் மற்றும் தேவையான நிதியுதவி என்பன குறித்து உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அவசர உதவிச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் 2 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு அவசியமான அவசர உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உலக உணவுத்திட்டத்தின் அவசர உணவு மற்றும் நிதியுதவியையும், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாடசாலை உணவையும் பெற்றிருக்கின்றனர். இவ்வாண்டு பெப்ரவரி 20 – மார்ச் 20 வரையான ஒருமாதகாலத்தில் 1,037 பாடசாலைகளில் 141,085 மாணவர்களுக்கு அவசியமான உணவு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 32 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதுடன், 73 சதவீதமான குடும்பங்கள் தமது உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்காகப் பல்வேறு மாற்றுவழிகளைக் கையாள்கின்றன.

உள்நாட்டு உணவுப்பணவீக்கம் தொடர்ந்தும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. உணவுப்பாதுகாப்பு தொடர்பான உலக வங்கி அறிக்கையின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் உயர்வான உணவுப்பணவீக்கமுடைய நாடுகளின் பட்டியலில் இலங்கை 10 ஆவது இடத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நிதி அல்லது வேறு வழிமுறைகள் மூலமான உணவுப்பொருள்சார் உதவிகள், பாடசாலை உணவு மற்றும் போசணைசார் உதவிகள் ஆகிய மூன்று வழிகளில் நாடளாவிய ரீதியில் சுமார் 3.4 மில்லியன் மக்களுக்கான அவசர உதவிகளை வழங்குவதற்கு உலக உணவுத்திட்டம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் 300,000 பேருக்கு அவசியமான உணவுப்பொருட்களை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை அரிசி, மரக்கறி எண்ணெய், துவரம்பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் குருணாகல், யாழ்ப்பாணம், மொணராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தற்போது விநியோகிக்கப்பட்டுவருகின்றன.

மேலும் இவ்வுதவிகளை வழங்குவதற்கு 63 மில்லியன் டொலர் நிதி அவசியமென உலக உணவுத்திட்டம் மதிப்பிட்டிருந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், லக்ஸம்பேர்க், நியூஸிலாந்து, நோர்வே, சுவிஸ்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்தும், ஐக்கிய நாடுகள் சபையின் அவசர நிதியத்திடமிருந்தும் 48 மில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.